மத்திய அரசின் அதிர்ச்சி பதில்! உக்ரைன் போரில் இந்திய வீரர்கள் 16 பேரைக் காணவில்லை?..
,

உக்ரைன் போரில் 18 இந்திய வீரர்களுள் இன்னும் ரஷ்ய ராணுவத்தில் நீடிப்பதாகவும், அதில் 16 பேரின் இருப்பிடம் தெரியவில்லை என்றும் மத்திய இணைய அமைச்சர் கூறுவது அதிர்ச்சியளிக்கிறது என எம்பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
ரஷ்ய உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்தியர்களின் உயிர் இழப்பு, பாதுகாப்பு பற்றி நாடாளுமன்றத்தில் எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார். அதற்கு வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் பதிலளித்த நிலையில், அந்த பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக எம்.பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “நானும், எம்பி தயாநிதி மாறனும் எழுப்பிய கேள்விக்கு (எண் 903 / 07.02.2025) வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் அளித்துள்ள பதில் அதிர்ச்சி தருகிறது. இந்தியாவைச் சேர்ந்த எத்தனை வீரர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்தார்கள்? எத்தனை பேர் நாடு திரும்பி இருக்கிறார்கள்? எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள்? என்ற தகவல் அமைச்சரின் பதிலில் இல்லை.
தற்போது, 18 பேர் இன்னும் ரஷ்ய ராணுவத்தில் நீடிப்பதாகவும், அதில் 16 பேரின் இருப்பிடம் தெரியவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். இது குறித்து ரஷ்ய நிர்வாகத்தின் உயர் மட்ட அளவிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் தொடர்ந்து பேசி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும், இந்திய வீரர்களின் பாதுகாப்பு, உடல்நலம், ராணுவத்தில் இருந்து விடுவிப்பு, தாயகம் திரும்புதல் ஆகியன பற்றி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதேபோல், உயிரோடு இல்லாவிடில் அவர்களது சடலங்களை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சொல்லி இருப்பது நிலைமையின் கடுமையை விளக்குகிறது.
இந்தியாவில் இருந்து வெளிநாட்டின் ராணுவத்தில் போய்ச் சேருகிற நிலை வேதனைக்குரியது. அக்னிபாத் (AGNIPATH SCHEME) போன்ற நிரந்தரமற்ற அத்தக் கூலி முறைகளை நோக்கி நகர்ந்ததே இந்த அவல நிலைக்கு காரணம் எனக் கருதுகிறேன். அந்நிய நாடுகளின் எல்லைகளை காக்கும் பணியில் இந்திய இளைஞர்களின் உயிர்கள் அநியாயமாக பலியாவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஒன்றிய அரசு இப்போதாவது அக்னி பாத் முறையை திரும்பப் பெற வேண்டுமென்றும், வெளிநாடுகளின் ராணுவத்தில் போய்ச் சேரும் அவல நிலையை மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.