காவல் நிலையம் முன்பு பெண் தற்கொலை; தேசிய ஆதி திராவிடர் ஆணையம் விசாரணை!
என்ஜினியராக பணி புரிந்து வரும் கீர்த்திகா கடந்த 9 ஆம் தேதி உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தனது சகோதரர் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக இரு பெண்கள் விஷம் குடித்த சம்பவம் குறித்து தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் விசாரணை நடத்தியது.
காவல் நிலையம் முன்பு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் விசாரணை நடத்தியது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி அரச மர தெருவை சேர்ந்தவர் அய்யாவு. இவரது மகன் தினேஷ் (32) மீது 13 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் தினேஷ் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதாக கூறி தினேஷின் தங்கைகளான மேனகா (31) கீர்த்திகா (29) ஆகியோர் நடுக்காவேரி போலீஸ் நிலையம் முன்பு கடந்த 8ஆம் தேதி விஷம் குடித்தனர்.
இதனையடுத்து 2 பேரையும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி என்ஜினியராக பணி புரிந்து வரும் கீர்த்திகா கடந்த 9 ஆம் தேதி உயிரிழந்தார். மேனகாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நடுக்காவேரி காவல் ஆய்வாளர் சர்மிளாவை கடந்த 11 ஆம் தேதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மாவட்ட எஸ்பி ராஜாராம் உத்தரவிட்டார். மேலும் இரண்டு துணை காவல் ஆய்வாளர்கள், இரண்டு பெண் போலீசார் ஆகியோர் கடந்த 16ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும் கீர்த்திகா உயிரிழந்தது தொடர்பாக அவருடைய உறவினர் ராஜபாண்டியன் கொடுத்த புகாரின்பேரில் தற்கொலைக்கு தூண்டுதல், ஆதிதிராவிடர் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே காவல் ஆய்வாளர் ஷர்மிளா உட்பட 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கீர்த்திகாவின் உடலை வாங்க மறுத்து நடுக்காவேரி அரச மர தெருவில் தொடர்ந்து உறவினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தேசிய ஆதிதிராவிடர் ஆணைய இயக்குநர் ரவிவர்மன் தலைமையிலான குழுவினர் நேற்று (17ஆம் தேதி) நடுக்காவேரிக்கு சென்று கீர்த்திகாவின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேனகாவிடம் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பான அறிக்கை தலைமையிடத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தேசிய ஆதிதிராவிடர் ஆணைய இயக்குநர் ரவிவர்மன் கூறியுள்ளார். இந்த விசாரணையின் போது மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.