69 இலட்ச மக்களின் எதிர்பார்ப்புகளுக்காகவே புதிய அரசியல் கூட்டணி ; பிரபல்யமான நபரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம். - உதய கம்மன்பில .
எவ்விதமான இலக்கு மற்றும் எதிர்பார்ப்பும் இல்லாத வகையில் சட்டமூலத்தின் ஏற்பாடுகள் காணப்படுகின்றன.
பிரபல்யமானவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம்.
கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் புதன்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதியால் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலத்தில் மூர்க்கத்தனமான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. எவ்விதமான இலக்கு மற்றும் எதிர்பார்ப்பும் இல்லாத வகையில் சட்டமூலத்தின் ஏற்பாடுகள் காணப்படுகின்றன.கனவு மற்றும் கற்பனை சட்டமூலம் என்றே குறிப்பிட வேண்டும்.
இந்த சட்டமூலத்தின் ஊடாக ஸ்தாபிக்கப்படும் ஆணைக்குழுக்களை ஜனாதிபதி நியமிக்கிறார்.அவ்வாறு இருக்கையில் எவ்வாறு சுயாதீனமான முறையில் பொருளாதாரம் தீர்மானங்கள் எடுக்கப்படும். புதிய மத்திய வங்கி சட்டத்தினால் ஏற்பட்ட நிலைமை இந்த சட்டமூலத்தின் ஊடாகவும் ஏற்படும். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.
ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளில் எவ்விடத்திலும் இச்சட்டமூலம் பற்றி குறிப்பிடப்படவில்லை.ஆகவே இந்த சட்டமூலம் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு முரணானது.இந்த சட்டமூலத்துக்கு அமைய 2027 ஆம் ஆண்டுக்கு பின்னர் பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதத்தை காட்டிலும் அதிகரித்துக் கொள்வதற்கும்,2050 ஆம் ஆண்டு பெண் ஊழியப்படை பங்களிப்பை 50 சதவீதத்தால் அதிகரித்துக் கொள்வதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு அவை அமைச்சரவைக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் சட்டத்தின் ஏற்பாடுகளை மீறும் போது அதற்கான தண்டனைகள் குறிப்பிடப்பட்டிருக்கும்.வழங்கப்பட்ட பொறுப்புக்களை முறையாக நிறைவேற்றாவிடின் அமைச்சரவைக்கு வழங்கும் தண்டனை பற்றி இச்சட்டமூலத்தில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.ஆகவே இச்சட்டமூலம் பயனற்றது.எமது சர்வஜன சக்தி என்ற புதிய அரசியல் கூட்டணி தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.கூட்டணி அங்குரார்ப்பணம் செய்த போது எதிர்கால கொள்கை திட்டங்களை வெளியிட்டுள்ளோம் என்றார்.