தலைவரும் புலம்பெயர் தமிழர்களிடம் பிச்சை கேட்டார் - நானும் புலம்பெயர் தமிழர்களிடம் பிச்சை கேட்கின்றேன் - "புலிகேசி அர்ச்சுனா"
புலிகளை கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட 'விடுதலைப் புலிகளின் தலைவர் தன்னுடைய சொந்த தேவைகளுக்கு பணம் கேட்டார். மோசடி செய்தார்' என்ற குற்றச்சாட்டுக்களை வைப்பதில்லை.

தலைவரும் புலம்பெயர் தமிழர்களிடம் பிச்சை கேட்டார் - நானும் புலம்பெயர் தமிழர்களிடம் பிச்சை கேட்கின்றேன் - பா உ அர்ச்சுனா
பெண்களை கேவலப்படுத்தி அவமானப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக பாராளுமன்றத்தில் சிறப்புரிமை தடை செய்யப்பட்டதற்கு எதிரான முறைப்பாட்டை பாராளுமன்ற சபாநாயகரிடம் நேற்று கையளித்தார் பா உ இராமநாதன் அர்ச்சுனா. தன்னுடைய சிறப்புரிமை மீளளிக்கப்படாவிட்டால் அதற்கு எதிராக தான் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தன்னுடைய காணொலியில் சூளுரைத்துள்ளார் பா உ இராமநாதன் அர்ச்சுனா.
இதற்காகவும் அர்ச்சுனா மீது அவரால் பாதிக்கப்பட்ட பலரும் போட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு எதிராகவும் வழக்குகளை நடாத்துவதற்கும், தன்னுடைய காரைத் திருத்துவதற்கும், பண உதவி செய்யுங்கள் - 'பிச்சை போடுங்கள்' என்று, புலம்பெயர் தமிழர்களை நோக்கி கேட்டு, ஏப்ரல் 8இல் பா உ அர்ச்சுனா ஒரு பதிவை இட்டுள்ளார்.
தான் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் பணம் பெறுவதை நியாயப்படுத்துவதற்கு அர்ச்சுனா, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரைத் துணைக்கு அழைத்துள்ளார். வே பிரபாகரனும் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் பிச்சை எடுத்திருந்தார். நானும் அதனையே செய்கின்றேன், என அவர் அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்திருக்கின்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது பல கடுமையான அரசியல் விமர்சனங்கள் உள்ளது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட 'விடுதலைப் புலிகளின் தலைவர் தன்னுடைய சொந்த தேவைகளுக்கு பணம் கேட்டார். மோசடி செய்தார்' என்ற குற்றச்சாட்டுக்களை வைப்பதில்லை. ஆனால் வே பிரபாகரனையும் மாவீரர்களையும் வைத்துப் பணம் பறிக்கும் கும்பல்கள் பல உலகின் பல பாகங்கிலும் உருவாகியுள்ளது.
'பா உ அர்ச்சுனா போல் தலைவரும் பிச்சை எடுத்தார் தானும் அந்த விழயில் பிச்சை எடுக்கின்றேன்' என வழக்குகளை நடாத்த, காரைத் திருத்த, காசை அனுப்பி வைக்கும்படி கோருகின்றார். சுவிஸில் உள்ள அப்துல்லா என அறியப்பட்ட ரகுபதி 'தலைவர் குடும்பத்துடன் நோய்வாய்ப்பட்டு இருக்கின்றார். அவருக்கு சிகிச்சையளிக்க பணம் வேண்டும்' என்று கோருகின்றார். 1990க்களின் முற்பகுதியில் தளபதி கிட்டு லண்டனில் இருந்த போது சொன்னது, 'எங்களுக்கு எதிரி ஒரு பிரச்சினையில்லை, அவர்களை எங்களுக்கு நன்கு தெரியும். ஆனால் எங்களோடு கூட இருப்பவர்கள் தான் மிக ஆபத்தானவர்கள்.' அது போல் புலிகளையும் மாவீரர்களையும் பயன்படுத்துபவர்கள் பற்றி மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
பா உ அர்ச்சுனா தொடர்பில் அவருடைய சுயேட்சைக்குழுவில் போட்டியிட தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மூவரை வழங்கிய பாதிக்கப்பட்ட பெண் அர்ச்சுனா மீது தங்கள் நவாலிப் பகுதி அண்ணன் ஒருவர் அர்ச்சுனாவுக்கு பணம் அனுப்பியதாகவும் ஆனால் இவர் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவே இல்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.