தமிழ்த் தேசியப் பேரவையின் உடன்பாடு 17 இல் கைச்சத்தாகும்?
.
ஏழு தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களின் ஒன்றிணைவான தமிழ் மக்கள் பொதுச்சபையும் கூட்டிணைந்து தமிழ்த் தேசிய பேரவை என்ற பொதுக்கட்டமைப்பை உருவாக்குவதற்கு இணக்கப்பாட்டை எட்டியுள்ள நிலையில் கடந்த 6ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனின் மறைவினையொட்டி குறித்த புரிந்துணர்வு உடன்பாட்டு நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஒத்திவைக்கப்பட்ட இந்த கைச்சாத்திடும் நிகழ்வு எதிர்வரும் 17ஆம் திகதி முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிவில் அமைப்புக்களின் ஒன்றிணைவான தமிழ் மக்கள் பொதுச்சபையானது இன்று முதல் மட்டக்களப்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.
குறிப்பாக தமிழ் பொது வேட்பாளரின் முக்கியத்துவம் உள்ளடங்கிய விடயங்கள் சம்பந்தமாக மட்டக்களப்பில் உள்ள பலதரப்பட்ட தரப்பினரையும் சந்தித்து உரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.