அமெரிக்காவில் பிரதமர் மோடி... அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் இன்று ஆலோசனை!
,

பிரான்சில் நடந்த செயற்கை நுண்ணறிவு குறித்த உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார். இன்று அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் பிரதமர் ஆலோசனை நடத்துவார்.
பிரான்சில் செயற்கை நுண்ணறிவு குறித்த உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி இன்று காலை அமெரிக்காவுக்கு சென்றார். வாஷிங்டன் விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு பல துறை அதிகாரிகள் மரியாதை செலுத்தி வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து அதிபர் டொனால்டு டிரம்ப்பின் விருந்தினர் மாளிகைக்கு பிரதமர் அழைத்து செல்லப்பட்டார். அப்போது பிரதமருக்கு அங்குள்ள இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பிரதமர் மோடி அவர்களை பார்த்து கை அசைக்க, இந்தியர்கள் 'வந்தே மாதரம்' மற்றும் 'மோடி மோடி' என கோஷமிட்டு வரவேற்றனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் எக்ஸ் தள பக்கத்தில், '' குளிருக்கு மத்தியில் அன்பான வரவேற்பு வழங்கியுள்ளனர். வாஷிங்டன் டிசி-யில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோர் என்னை மிகவும் சிறப்பாக வரவேற்றுள்ளனர். அவர்களுக்கு எனது நன்றி'' என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு அவரை சந்திக்கும் நான்காவது வெளிநாட்டுத் தலைவர் பிரதமர் மோடி ஆவார். டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். அதற்குள் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுடன் சந்திப்பு நடந்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் ஜோர்டானின் மன்னர் அப்துல்லா ஆகியோர் டிரம்ப்பை சந்தித்துள்ளனர். அவர்களுக்கு டொனால்டு டிரம்ப் விருந்து அளித்துள்ளார்.
அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு அங்கு முதல் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று இரு நாடுகள் உறவு குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்படவுள்ளது.
பிரதமர் மோடி இதுகுறித்து, '' வாஷிங்டன் டிசியில் தரையிறங்கினேன். அதிபர் டொனால்டு டிரம்பின் சந்திப்பையும், இந்தியா-அமெரிக்கா இடையிலான உலகளாவிய கூட்டாண்மையை உருவாக்க எதிர்நோக்குகிறேன். நமது மக்கள் நலனுக்காகவும், சிறந்த எதிர்காலத்திற்காகவும் நமது நாடுகள் இணைந்து உழைக்கும்'' என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.