தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி நடிகராக உயர்ந்த கோதண்டராமன் உயிரிழந்தார்!
.
தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி பின்னர் நடிகராக உயர்ந்த கோதண்டராமன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 65.
தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டர்களில் ஒருவர் கோதண்டராமன். கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக கோதண்டராமன் பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். முன்னணி நடிகர்களின் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக கோதண்டராமன் வேலை பார்த்திருக்கிறார்.
ராம்கி நடித்த ‘எல்லாமே என் பொண்டாட்டி தான்’, முரளி, சிவாஜி நடித்த ‘எல்லாமே என் ராசாதான்’, ‘ஒன்ஸ் மோர்’ உள்ளிட்ட பல படங்களில் சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றினார். மேலும், பகவதி, திருப்பதி, கிரீடம், வேதாளம் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் 2012 இல் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ‘கலகலப்பு’ திரைப்படத்தில் காமெடி நடிகராக நடித்தார் கோதண்டராமன்.
சந்தானத்துடன் இணைந்த ‘பேய்’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்து காமெடியில் கலகலப்பூட்டியிருப்பார். அவரின் காமெடி காட்சிகள் மீம்களாக இணையத்தை ஆக்கிரமித்தன. இப்போதும் ‘கலகலப்பு’ படத்தில் அவரின் காமெடி காட்சிகள் ரசிகர்களை சிரிக்க வைக்க தவறுவதில்லை.
இந்த நிலையில் தான், கோதண்டராமன் காலமானார் என்கிற செய்தி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோதண்டராமன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் என தகவல் வெளியாகியுள்ளது.