பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 67 வீதம் நிறைவு
.
பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 67 வீதம் நிறைவடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 07 ஆம் திகதி வரை நடைபெறும் என தபால் மாஅதிபர் S.R.W.M.R.P சத்குமார தெரிவித்தார்.
17 தசம் 1 மில்லியன் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து தமக்கு கிடைத்திருப்பதாக தபால் மாஅதிபர் கூறினார்.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை கடந்த 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன் இதுவரை 11.4 மில்லியன் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க நாளை மறுதினம் வரை காலஅவகாசம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
நிலவும் மழையுடனான வானிலையால் சிரமங்கள் ஏற்பட்ட போதிலும் அனைத்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளையும் விநியோகிக்க அதிகபட்ச முயற்சிகளை எடுத்துள்ளதாகவும் தபால் மாஅதிபர் S.R.W.M.R.P சத்குமார குறிப்பிட்டார்.
வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும்போது அதனை கையொப்பமிட்டு பெற்றுக்கொள்ளுமாறும் அவ்வாறு பெற்றுக்கொள்ளப்படாத வாக்காளர் அட்டைகள் தபால் அலுவலகங்களில் வைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
07 திகதி முதல் தேர்தல் நடைபெறும் நாள் வரை தபாலகங்களில் தமது அடையாளங்களை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தபால் மாஅதிபர் தெரிவித்தார்.