தமிழ்ப் பொது வேட்பாளருக்கே ஆதரவு: தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி கிளை தீர்மானம்
.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் வேண்டுமென இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையில் நேற்று வெள்ளிக்கிழமை விசேட தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் உபதலைவரும், வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சருமான தம்பிராசா குருகுலராஜா தலைமையில் மாவட்டக் கிளை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்களின் பங்கேற்போடு நடைபெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேற்படி தீர்மானம், நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மத்திய செயற்குழுவுக்கு சமர்ப்பிக்கும் பொருட்டு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு நேரில் சமர்ப்பிக்கப்படவுள்ள கடிதத்தில்,
எதிர்வரும் 2024.09.21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், உள்நாட்டு தமிழ் வாக்காளர்களிடையேயும், புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் மக்கள் மத்தியிலும், அரசியற் கட்சிகளுக்குள்ளும் எழுந்துள்ள பல்வேறு வாதப் பிரதிவாதங்களை ஆழமாகவும், விசாலமாகவும் ஆராய்ந்து பொருத்தமான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டிய நிலைக்கு காலம் எம்மை நிர்ப்பந்தித்திருக்கிறது.
அதனடிப்படையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையினராகிய நாங்கள், கட்சியினுடைய இணக்க விதிகளுக்கு உட்பட்டு மாவட்டத்தின் பல்வேறு தரப்பினருடனும், சிவில் சமூகம் மற்றும் மதகுருமார்களுடனும், பொதுமக்களுடனும் கலந்துரையாடி பெறப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில், 2024.08.30 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டக் கிளையாக ஒன்றிணைந்து ஏகமனதாக எடுத்த கீழ்வரும் தீர்மானத்தை, மத்திய செயற்குழுவுக்கு சமர்ப்பிக்கிறோம்.” என் கூறயுள்ளனர்.
இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவை வழங்கியிருந்தது. இந்தப் பின்புலத்திலேயே கிளிநொச்சி மாவட்ட கிளை பொது வேட்பாளரை ஆதரித்துள்ளது.