தமிழரசு கட்சிக்குள் மீண்டும் இருநிலைப்பாடு: இழுபறி நிலையில் பொதுவேட்பாளர் தெரிவு
.
.ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கு தமிழரசு கட்சியின் சம்மதம் கிடைக்க பெறாமை காரணமாக பொது வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படாமல் பிற்போடப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாக தமிழ் கட்சிகளுக்கும் சிவில் அமைப்புகளுக்கும் இடையிலான நீண்ட கலந்துரையாடல் சில மாதங்களாக இடம் பெற்று வந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் ஏழு தமிழ் கட்சிகளும் ஆறு சிவில் அமைப்புகளும் இணைந்து தமிழ் பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி பொது வேட்பாளர் தொடர்பான தெரிவை முன்னெடுப்பதற்கான உப குழுக்கள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில் தமிழ் பொது வேட்பாளராக தமிழரசு கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா மற்றும் கிழக்கு மாகாண தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் ஆகியோரின் பெயர்கள் இறுதி முடிவுக்காக பரிசீலனையில் எடுக்கப்பட்டது.
இருவரும் தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள் என்ற நிலையில் தமிழரசு கட்சிக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சார்பு அணி பொது வேட்பாளருக்கு ஆதரவாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆதரவு அணி பொது வேட்பாளருக்கு எதிராகவும் இருப்பதால் தமிழரசு கட்சியின் சம்மதம் கிடைக்கப்பெறாமல் உள்ளது.
இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் ஆதரவு இல்லாமல் இருவருடைய பெயர்களில் ஒருவரை தெரிவு செய்வதில் சிக்கல் காணப்படுவதாலேயே பொது வேட்பாளர் குறித்த அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.