வட கொரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பயணிகள் ரயில் சேவையும் மீண்டும் தொடங்கியது,
400 க்கும் மேற்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் பிப்ரவரி மற்றும் மே 2024 க்கு இடையில் வட கொரியாவுக்குச் சென்றுள்ளனர்
வட கொரியாவுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை சர்வதேச அளவில் அதன் மீதான ஆபத்தான நாடு என்னும் பிம்பத்தை மென்மையாக்க உதவும்.
கோவிட் -19 தொற்றுநோய் சூழல் காரணமாக பிப்ரவரி 2020 இல் இருந்து இடைநிறுத்தப்பட்ட வட கொரியாவிற்கு செல்லும் `குழு சுற்றுலா’ பயணங்களை ரஷ்யா மீண்டும் தொடங்கியுள்ளது.
வட கொரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பயணிகள் ரயில் சேவையும் மீண்டும் தொடங்கியது, கடந்த நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக ஜூன் 6 ஆம் தேதி வடகொரியா – ரஷ்யா இடையிலான ரயில் சேவைத் தொடங்கியது.
400 க்கும் மேற்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் பிப்ரவரி மற்றும் மே 2024 க்கு இடையில் வட கொரியாவுக்குச் சென்றுள்ளனர் என்று ரஷ்ய பிராந்தியமான ப்ரிமோர்ஸ்கி க்ராயின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய சுற்றுலா நிறுவனம் ஒன்று (Vostok Intur), அதன் இணையதளத்தில் 750 டாலருக்கு (ரூ.62,571) வட கொரியாவிற்கு நான்கு முதல் ஐந்து இரவு சுற்றுலாப் பயணத்தை வழங்குகிறது.
இந்த சுற்றுலா ஏஜென்சி செப்டம்பர் மாதம் வரை வட கொரியாவிற்கு குழு சுற்றுப்பயணங்களை திட்டமிட்டு வருகிறது. இதில் பெக்து மலை, வட கொரிய வரலாற்று தளங்கள் ஆகிய பகுதிகளை பார்வையிடுவது, கொரியப் போரின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வது ஆகியவை அடங்கும்.
“சுற்றுலா துறை என்பது வெளிநாட்டு நாணயத்தை ஈட்டுவதற்கான ஒரு வழி மட்டுமல்ல, மக்களிடையே நேரடி பயணங்கள் மூலம் உறவுகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது” என்று வட கொரிய ஆய்வுகள் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிம் டோங்-யூப் பிபிசியிடம் கூறினார்.
வட கொரியாவுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை சர்வதேச அளவில் அதன் மீதான ஆபத்தான நாடு என்னும் பிம்பத்தை மென்மையாக்க உதவும் என்றும் அவர் கருதுகிறார்.
எனவே, வட கொரிய சுற்றுலா என்பது சமூக-கலாசார பரிமாற்றத்தின் முக்கிய வழிமுறையாகக் கருதப்படுகிறது. அதன் பொருளாதார நன்மைகள் மட்டுமின்றி நாட்டின் பிம்பத்தை மேம்படுத்துகிறது.
இருப்பினும், கொரிய தீபகற்பத்தில் அதிகரித்து வரும் பதற்றங்கள் குறித்து சில சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்து, வட கொரியாவுக்கான குழு சுற்றுப்பயணங்களை ரத்து செய்த சம்பவங்கள் சமீபத்தில் நடந்துள்ளன.
மே 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட நான்கு நாள் குழு சுற்றுப்பயணம் பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டதாக ரஷ்ய பயண நிறுவனம் வோஸ்டாக் இன்டூர் சமீபத்தில் அறிவித்தது.
வட கொரியாவின் கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுலா உள்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டினரின் சுதந்திர நடமாட்டத்தின் மீதான கட்டுப்பாடுகள் சுற்றுலாத் துறையின் விரிவாக்கத்திற்கு சவால்களை ஏற்படுத்துகின்றன.
வட கொரியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் சுற்றுலா ஒத்துழைப்பைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பேராசிரியர் காங் நம்புகிறார்.