அரசியல் கைதுகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் - டக்ளஸ்!
ஈ.பி.டி.பி. கட்சியின் அடுத்த தலைமையை கட்டியெழுப்பும் முயற்சியும் நடைபெற்று வருகின்றது.
அரசியல் வாழ்வில் சவால்கள் சகஜமானது. அந்தவகையில், எதிர்காலத்திலும் அரசியல் கைதுகள் கூட இடம்பெறலாம். அவ்வாறான சூழல் ஏற்பட்டாலும் கட்சியின் செயற்பாடுகளை வீரியமுடன் முன்னெடுத்துச் செல்வதற்கு கட்சி உறுப்பினர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.
கட்சியின் யாழ் மாவட்ட தலைமை அலுவலகத்தில்
யாழ் - கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், நிர்வாக மற்றும் உதவி நிர்வாக செயலாளர்கள், பிரதேசங்களின் நிர்வாக மற்றும் உதவி நிர்வாக செயலாளர்கள், முக்கியஸ்தர்களின் பிரசன்னத்துடன் நடைபெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் -
கடந்தகால சேவைகள் மற்றும் அரசியல் நகர்வுகளின் அடிப்படையில். சமகால அரசியல் களத்தில் ஈ.பி.டி.பியின் தேவை அதிகமாக உணரப்படுகின்றது. இதை மக்களின் உணர்வுகளூடாக வெளிப்படுத்தப்படுகின்றது.
இதேநேரம் கட்சியின் கொள்கையை நேர்த்தியாகவும் அதை வெளிப்படையாகவும் முன்கொண்டு செல்ல எவர் முன்னின்று உழைத்தாலும் அவர்கள் கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியும்.
அத்துடன் கட்சியின் அடுத்த தலைமையை கட்டியெழுப்பும் முயற்சியும் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் கட்சி நலனும் கட்சி செயற்பாடுமே ஒவ்வொருவரதும் முதன்மையாக இருக்க வேண்டும் அதனூடாகவே மக்களின் எதிர்காலத்தையும் அபிலாசைகளையும் வெற்றிகொள்ள முடியும்" என்றார்.


