ரணிலின் புதிய கூட்டணி நாளை உதயம்: பிரச்சாரங்களை தீவிரப்படுத்தவும் திட்டம்
.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்துள்ள கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பிரமாண்ட கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவந்த நிலையில், இதன் அங்குரார்ப்பண நிகழ்வை நாளை வியாழக்கிழமை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
கொழும்பு பத்தரமுல்லை வோட்டர்ஸ் ஹேஜ் (Waters Edge) இல் இந்த நிகழ்வு இடம்பெற உள்ளதுடன், நாளை காலை ரணிலை ஆதரிக்கும் அனைத்து எம்.பிகளும் இந்த நிகழ்வில் பங்குபற்றி உடன்படிக்கையில் கைச்சாத்திடுமாறு ரணில் விக்ரமசிங்கவின் தரப்பால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கூட்டணியின் தலைவர், செயலாளர் மற்றும் ஏனைய பதவிகள் குறித்த அறிவிப்புகளும் இதன்போது வெளியிடப்பட உள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி உட்பட பல்வேறு கட்சிகள் இந்த கூட்டணி உடன்படிக்கையில் கைச்சாத்திட உள்ளன.
மேற்படி கூட்டணியின் கீழ் ரணிலை ஆதரிக்கும் எம்.பிகள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவும் உத்தேசித்துள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் இரண்டு வாரங்களில் கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டு ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துமாறு ரணிலை ஆதரிக்கும் எம்.பிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அரச தரப்புச்செய்திகள் தெரிவிக்கின்றன.