முதல் தெரிவு அரியம்; 2 வது தெரிவு அனுர; தமிழர் தேசத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம்
.
இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில், யார் அடுத்த ஜனாதிபதி என்ற கேள்வி தொடர்ந்தும் நிலவிவரும் அதேவேளை,மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் அவாவும் இலங்கை மக்களிடம் ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக கடந்த 75 வருடங்களாக ஒரே பாசறையில் உருவான தலைவர்களே இந்த நாட்டில் ஆட்சியதிகாரத்தை அலங்கரித்து வந்த அதேவேளை,நாடு ஒரு வங்குரோத்து அடைந்த நாடாக உருவெடுப்பதற்கும் இன-மத முறுகல் மற்றும் ஒரு இனம் இன்னொரு இனத்தின் மீது அச்சம் கொண்டு பகைமையை வளர்த்ததற்கும் இந்த 75 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்த அரசுகளும் தலைவர்களுமே காரணம் என்பதை இன்றைய தலைமுறை சிந்திக்க ஆரம்பித்திருக்கும் ஒரு சூழலில் நாட்டில் ஒரு மாற்று சக்தியை உருவாக்குவதற்கு அணி திரள்வதையும் அதற்கான முயற்சிகளில் இறங்கியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
அந்த அடிப்படையில் தமிழர் தேசமும் போருக்கு பின்னரான கடந்த 15 வருடங்களுக்கு பின்னர் ஒரு தெளிவான எண்ணவோட்டத்தில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது.அந்த அடிப்படையில் தமிழர் தேசமான வடக்கு-கிழக்கில் இம்முறை பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டிருக்கும் அதேவேளை,அவருடைய வெற்றிக்காக ஒரு சில காட்சிகளை தவிர ஏனைய அனைத்து கட்சிகளும் அதேபோல்,சிவில் சமூகத்தினர்,பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மாற்றத்துக்காக ஏங்கும் மக்கள் உழைக்க ஆரம்பித்திருக்கும் அதேவேளை,ஒட்டுமொத்த நாட்டிலும் ஒரு மாற்றம் ஏற்படவேண்டுமென்ற நோக்கத்தில் பயணிப்பதை அவதானிக்க முடிகிறது.
அந்த அடிப்படையில் தமிழ் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் பிரசார நடவடிக்கைகளின் போது குறிப்பாக தமிழர்கள் அதுவும் இளம் சமூகம் முன்னெடுக்கும் பிரசாரங்களின்போது முதல் தெரிவு பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கும் இரண்டாவது புள்ளடி அனுர குமாரவுக்கும் வழங்குவது தொடர்பில் சிலாகிக்கப்பட்டு வருவதாக அறியக்கிடைக்கிறது.
இம்முறை தேர்தலில் தமிழர் தாயகத்திலும் ஒரு மாற்றம் ஏற்படவேண்டுமென்றும் ஒட்டுமொத்த நாட்டிலும் ஒரு மாற்றம் வரவேண்டுமென இந்த இளம் சமூகம் எதிர்பார்க்கிறது.அந்த அடிப்படையில் முதல் புள்ளடி அரியத்துக்கும் இரண்டாவது விருப்பு புள்ளடி அனுரவுக்கும் வழங்கப்படவேண்டுமென்ற கோரிக்கையை இந்த இளம் சமூகம் முன்வைத்துவருவதுடன்,பலரது விருப்பும் இதுவாகத்தான் இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
ஆகவே பழமைவாத அரசியல் பாசறையில் வளர்ந்தவர்களை விலக்கிவைத்துவிட்டு புதிய ஒரு தெரிவுக்கு இளம் சமூகம் முன் வந்திருப்பது நாட்டுக்கு எவ்வாறான எதிர்காலத்தை உருவாக்கப்போகிறது என்பதையும் அந்த தெரிவு வெற்றியளிக்குமா? என்பதையும் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னர் பார்க்கமுடியும்.