ஜனாதிபதி தேர்தலை அறிவிக்க சற்று தாமதமாகும்
.
ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் திகதி எதிர்வரும் வாரத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க “மவ்பிம” நாளிதழுக்கு தெரவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை நடத்த தேவையான முதற்கட்ட கலந்துரையாடல்கள் தற்போது பொறுப்புடைய தரப்பினருடன் நடத்தப்பட்டு வருவதாகவும் அதன்படி, நிச்சயமாக எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதி ரே்தல் இடம்பெறும் திகதியை நாடு அறிந்து கொள்ள முடியும் என ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க வெளிப்படுத்தினார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் திகதியை நாளையதினத்துக்கு (26) முன்னர் அறிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதற்கு முன்னர் ஊடகங்களுக்கு தெரவித்திருந்தார்.
ஜனாதிபதி தேர்தலை அவதானிப்பது தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச கண்காணிப்பாளர்களுடன் பலமுறை கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.
அதன்படி, பொதுநலவாய சபையின் தேர்தல் கண்காணிப்பு குழுவிற்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் நேற்று (24) கலந்துரையாடல் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ததுடன் அவர்களுடன் பூர்வாங்க கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஏனைய சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களுடன் மேலும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் படி ஜனாதிபதி தேர்தலை ஜூலை 17ஆம் திகதி அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டிருந்ததுடன் ஜனாதிபதி தேர்தல் திகதி இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 10ஆம் திகதி அறிவித்திருந்தது.
ஆனால் இந்த மூன்று நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த இரண்டு நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவித்து ஜனாதிபதி தேர்தல் நடைமுறைகளை இலகுபடுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் பஃரல் அமைப்பு (Pafferal) கடந்த 23ஆம் திகதி கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை (25) கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.