அரசாங்கத்தின் முடிவால் பொதுமக்களுக்கு அசௌகரியம்: தொழில்களும் இழப்பு
.
தேர்தல் நிறைவுபெறும் வரை இசைக்கச்சேரிகள் மற்றும் விழாக்களை நடத்த பொலிஸார் அனுமதி வழங்காத காரணத்தினால் நாடளாவிய ரீதியில் இசைக்கச்சேரி ஏற்பாட்டாளர்கள் சுமார் 300 பேர், இந்தத் துறையில் பாடகர்கள் , இசைக் கலைஞர்கள் , மேடை நிர்மாணிப்பவர்கள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தினால் நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இருபதுக்கும் மேற்பட்ட விழாக்கள் மற்றும் இசைக் கச்சேரிகள் நிறுத்தப்பட்டதாக இலங்கை கச்சேரி ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களின் கூட்டு சங்கத்தின் தலைவர் தினேஷ் அதாவுத தெரிவித்துள்ளார் .
தேர்தல் நடைபெறுவதன் மூலம் பொது மக்களின் ஏனைய செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படக் கூடாது எனவும், கலைத்துறையை தொழிலாகக் கொண்ட தொழில் செய்பவர்களுக்கு இது மிகவும் அநீதியான முடிவு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்திற்கு இலட்சக்கணக்கான கேளிக்கை வரியை செலுத்தி நாடு முழுவதும் கச்சேரிகள் மற்றும் விழாக்களை தமது குழு நடத்துவதாகவும், அவ்வாறான கச்சேரிகளுக்கு அறவிடப்படும் கேளிக்கை வரியை அரசாங்கம் உடனடியாகக் குறைக்க வேண்டும் எனவும் சங்கத்தின் ஊடகச் செயலாளர் சிதேஷ் ரங்கன விஜேவீர தெரிவித்தார்.