ஜனாதிபதித் தேர்தல்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய சந்திரிக்கா
.
ஜனாதிபதி வேட்பாளர்கள் சிலர் தனது ஆதரவை கோரியுள்ளதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்காமல் நடுநிலை வகிக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தில் பல்வேறு வேட்பாளர்களை ஆதரிப்பதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து தெளிவுப்படுத்திய சந்திரிக்கா,
“ 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளர்களுக்கும் தனது ஆதரவை வழங்கப் போவதில்லை.
அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும் போது தனி நபரை கருத்திற் கொள்ளாமல், ஒவ்வொரு வேட்பாளரின் செயற்திட்டங்கள், திட்டங்களை செயல்படுத்தும் விதம், நடைமுறைகள், அமைப்புகள் மற்றும் மக்களையும் கருத்திற் கொள்ள வேண்டும்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும், கல்வி, சுகாதாரம், விவசாயம், சிறு/நடுத்தர கைத்தொழில்கள் மற்றும் தொழில் முயற்சிகள், பெருந்தொழில்கள் மற்றும் ஏற்றுமதிகளை பல்வகைப்படுத்தல் மற்றும் பெருந்தோட்டம் போன்ற துறைகளுக்கான கொள்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
சர்வதேச வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறை, சிறந்த மற்றும் நேர்மையான நிர்வாகம், அரசாங்கத்தில் உள்ள ஊழலை நீக்குதல் மற்றும் வாக்குறுதியளிக்கப்பட்ட கொள்கைகளை சரியான முறையில் செயற்படுத்துதல் ஆகியவற்றின் உறுதிமொழியை கோருவதற்கு வாக்காளர்களுக்கு மறுக்க முடியாத உரிமை உள்ளது.
சட்டம், நிர்வாக மற்றும் நீதித்துறை மற்றும் அரசாங்கத்தின் அனைத்து உயர் பதவிகளுக்கும் உயர் நேர்மை மற்றும் தகுதியுடைய நபர்கள் நியமிக்கப்பட வேண்டும்” என்றார்.