இஸ்ரேலின் அயன் டோமை தாண்டி இலக்கை அடைந்த ஹிஸ்புல்லாவின் ஏவுகணைகள்!
.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி போர் மூண்டது. ஒரு வருடமாகியும் அங்கு தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நடந்துவருகின்றன. முதலில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே துவங்கிய போர், பிறகு பெலனானின் ஹிஸ்புல்லா, ஈரான் என தற்போது நீண்டுள்ளது.
அதன்படி, இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் துவங்கி இன்றுடன் ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பும், காசாவில் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில், 26 நபர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இஸ்ரேல் ராணுவத்தினர் காசாவின் டெய்ர் அல்-பலாஹ் நகரில் உள்ள மசூதி மீது வான் வழி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் அங்கு இருந்தவர்களில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலின் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரமான ஹைபா மற்றும் டைபிரியாஸ் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
வடக்கு இஸ்ரேலில் உள்ள ஹைபா நகரின் மீது ஹிஸ்புல்லா அமைப்பு இரண்டு ஏவுகணைகளை வீசியுள்ளது. அதேபோல், டைபிரியாஸ் நகரத்தின் மீது ஐந்து ஏவுகணைகளை வீசியுள்ளது.
இந்த ஏழு ஏவுகணைகளும், இஸ்ரேலின் அயன் டோம் தொழில்நுட்பத்தை மீறி இலக்கை துல்லியமாக தாக்கியுள்ளன. எதிர்பாராத விதமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலை தொடர்ந்து வடக்கு இஸ்ரேலில் சைரன் ஒலி எழுப்பப்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.