பிரான்சின் மனிதநேய மருத்துவக் கட்டமைப்பு: அடித்தட்டு மக்களுக்கும் அகதிகளுக்கும் கிடைக்கும் அரவணைப்பு!
முறையான ஆவணங்கள் இன்றி பிரான்சில் மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு 'அரசு மருத்துவ உதவி
பிரான்சின் மனிதநேய மருத்துவக் கட்டமைப்பு: அடித்தட்டு மக்களுக்கும் அகதிகளுக்கும் கிடைக்கும் அரவணைப்பு!
பிரான்சு நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு உலக நாடுகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. அங்கு வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் எவ்விதப் பாகுபாடும் இன்றி அடிப்படை வசதிகள் கிடைப்பதை அந்நாட்டு அரசு உறுதி செய்கிறது. பிரான்சின் மருத்துவ முறை மனிதநேயத்தின் அடையாளமாகப் போற்றப்படுகிறது. அங்குள்ள 'சமூகப் பாதுகாப்பு' அமைப்பின் மூலம் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.
இதற்காக ஒவ்வொருவருக்கும் 'கார்ட் விட்டால்' (Carte Vitale) எனப்படும் மின்னணு மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்படுகிறது. ஒரு நோயாளி மருத்துவரை அணுகும்போதோ அல்லது மருந்தகங்களில் மருந்துகள் வாங்கும்போதோ இந்த அட்டையைப் பயன்படுத்தினால், அதற்கான கட்டணத்தில் பெரும்பகுதியை அரசே நோயாளியின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகத் திருப்பிச் செலுத்திவிடுகிறது. குறிப்பாகப் புற்றுநோய், நீரிழிவு போன்ற நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவச் செலவுகள் முழுவதையும் அரசே நூறு விழுக்காடு ஏற்றுக்கொள்கிறது.
அதேபோல, குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு மருத்துவச் செலவுகளை முழுமையாக ஈடுகட்ட, 'சி.எம்.யு' (CMU) எனப்படும் சிறப்பு மருத்துவப் பாதுகாப்புத் திட்டம் உள்ளது. இதன் மூலம், அவர்கள் எவ்விதக் கட்டணமுமின்றி முழுமையான மருத்துவ வசதிகளைப் பெற முடியும்.
ஆனால், இந்த 'கார்ட் விட்டால்' மருத்துவ அட்டையோ அல்லது 'சி.எம்.யு' வசதியோ இல்லாத, முறையான வதிவிட அனுமதி (விசா அல்லது அகதி அந்தஸ்து) இன்றி வாழும் வெளிநாட்டவர்களுக்குத் தீவிரமான நோய் ஏற்பட்டால் என்ன செய்வது? அவர்கள் பணம் செலுத்தித்தான் சிகிச்சை பெற வேண்டுமா என்ற கேள்வி எழலாம். பிரான்சின் மருத்துவ முறை மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதால், அத்தகையவர்களுக்கும் அங்குச் சிறப்புத் திட்டங்கள் உள்ளன.
முறையான ஆவணங்கள் இன்றி பிரான்சில் மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு 'அரசு மருத்துவ உதவி' (AME - Aide Médicale de l'État) என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தகுந்த ஆவணங்களைச் சமர்ப்பித்து இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்துகொண்டால், அவர்களுக்கான மருத்துவச் செலவுகள் முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்கிறது. அவர்கள் மருத்துவமனைகளுக்கோ மருத்துவர்களுக்கோ எந்தப் பணமும் செலுத்த வேண்டியதில்லை.
ஒருவேளை, எந்தவொரு மருத்துவ அட்டைப் பதிவும் இல்லாத ஒருவருக்குத் திடீரென மாரடைப்பு போன்ற உயிராபத்து விளைவிக்கும் நோயோ அல்லது மோசமான விபத்தோ நேர்ந்தால் என்ன நடக்கும்? எந்தவொரு மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவும் நோயாளியிடம் ஆவணங்கள் இல்லை என்பதற்காகவோ, பணம் இல்லை என்பதற்காகவோ அவர்களைத் திருப்பி அனுப்பக் கூடாது என்பது பிரான்சு நாட்டின் உறுதியான சட்டம்.
அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறப்புச் சுகாதார அணுகல் மையங்கள் மூலமாக, எவ்விதக் கட்டணமும் செலுத்தாமல், வதிவிட அனுமதி இல்லாதவர்களும் அவசரக் காலங்களில் முழுமையான இலவசச் சிகிச்சையைப் பெற முடியும். உயிராபத்தான சூழலில் ஒருவரைக் காப்பாற்றுவதே முதல் கடமை; அதன் பிறகே நிர்வாக நடைமுறைகள் கவனிக்கப்படும். சுருக்கமாகச் சொன்னால், பணம் இல்லை அல்லது முறையான ஆவணங்கள் இல்லை என்ற காரணத்திற்காக எந்தவொரு மனித உயிரின் மருத்துவ உரிமையும் பிரான்சில் ஒருபோதும் மறுக்கப்படுவதில்லை.
பிரான்சு நாட்டின் தனித்துவமான சட்டங்கள்: வேலை நேரத்திற்குப் பின் முழுமையான ஓய்வும், பொருட்களை வீணாக்குவதைத் தடுக்கும் முறையும்!
பிரான்சு நாட்டில் மக்களின் அன்றாட வாழ்க்கையையும் நலனையும் மேம்படுத்தப் பல சிறப்பான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அவற்றுள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த ஒரு முக்கியச் சட்டம், அலுவலக நேரத்திற்குப் பிறகு 'தொடர்பைத் துண்டிக்கும் உரிமை' என்பதாகும். இதன்படி, வேலை நேரம் முடிந்த பின்பு, ஊழியர்கள் தங்கள் மேலதிகாரிகளோ அல்லது நிறுவனமோ அனுப்பும் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
தற்காலத் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஊழியர்கள் எந்நேரமும் வேலை குறித்தே சிந்திக்க வேண்டிய நிலை உருவானது. இதனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும், குடும்ப உறவுகளும், மனநலனும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனைத் தடுக்கும் நோக்கில், பிரான்சு அரசு இந்தச் சட்டத்தை அமல்படுத்தியது. ஐம்பது பேருக்கும் மேல் வேலை செய்யும் அனைத்து நிறுவனங்களும், தங்கள் ஊழியர்களின் ஓய்வு நேரத்தை முழுமையாக மதிக்க வேண்டும் என்பதை இந்தச் சட்டம் உறுதி செய்கிறது. இதை மீறித் தொந்தரவு செய்யும் நிறுவனங்களுக்குக் கடுமையான அபராதமும் விதிக்கப்படுகிறது.
இதேபோன்று, சுற்றுச்சூழலைக் காப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட மற்றொரு முன்னோடிச் சட்டம், 'பொருட்களை வீணாக்குவதைத் தடுக்கும் சட்டம்' ஆகும். பொதுவாகப் பெரிய கடைகளில் விற்கப்படாமல் மீதமாகும் புதிய துணிகள், காலணிகள், புத்தகங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களைச் சில நிறுவனங்கள் குப்பையில் வீசியோ அல்லது எரித்தோ அழிப்பது வழக்கம். ஆனால், பிரான்சில் இவ்வாறு விற்கப்படாத, கெட்டுப்போகாத பொருட்களை அழிப்பதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக, அந்தப் பொருட்களைத் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்க வேண்டும் அல்லது மறுசுழற்சி செய்ய வேண்டும் என்று சட்டம் கடுமையாக அறிவுறுத்துகிறது.
- சிவா சின்னப்பொடி


