இந்திய பிரதமர் மோடியை டெல்லியில் சந்திக்கும் ரணில்
,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் சனிக்கிழமை (22) இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுப்பட உள்ளார்.
எவ்வாறாயினும் 'கடற்பிராந்திய ஒத்துழைப்பின் புதிய பரிமாணங்களை அடையாளங்காணல்' எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகின்ற 8 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் சிறப்பு அதிதியாக பங்கேற்பதற்காக ஓமான் சென்றுள்ள ரணில் விக்கிரமசிங்க புதன்கிழமை நாடு திரும்பவுள்ளார்.
இதன் பின்னரே டெல்லிக்கு விஜயம் செய்வார் என முன்னாள் அரசாங்க தகவல் தினைக்களத்தின் பணிப்பாளர் நாயகமும் ரணில் விக்கிரமசிங்கவின் ஊடக செயலாளருமான தினித் சிந்தக கூறினார்.
2024 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கை - இந்திய கூட்டுத்திட்டங்கள் தொடர்ந்தும் இழுபறி நிலையை எதிர்ககொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பிருந்தே இலங்கையில் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்ட இந்திய திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை மீளாய்வு செய்வதாக குறிப்பிட்டு வந்தது.
குறிப்பாக அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் திட்டம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த அரசாங்கம், ஒப்பந்தத்தை மீளாய்வு செய்ய தீர்மானத்தை தொடர்ந்து அதானி நிறுவனம் அத்திட்டத்திலிருந்து விலகிக்கொண்டுள்ளது.
மேலும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு பல்வேறு வகையில் ஒத்துழைப்புகளை வழங்கியிருந்த இந்தியா, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைப்பதற்கும் பங்காற்றியிருந்தது.
ஆனால் இலங்கையில் இந்தியா திட்டமிட்டிருந்த கூட்டுத்திட்டங்கள் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தொடர்ந்தும் தாமதப்படுத்தப்படுகின்றமை டெல்லியின் கவலைகளில் ஒன்றாக காணப்படுகின்றது.
குறிப்பாக, திருகோணமலை மின் நிலைய விவகாரம் மற்றும் வடக்கு தீவுகளின் சூரிய சக்தி திட்டம் என பல்வேறு திட்டங்கள் வெறும் ஆவண கோப்புகளாகவே உள்ளன.
இத்தகைய நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இந்திய திட்டங்கள் குறித்து தொடர்ந்தும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், ரணில் விக்கிரமசிங்க டெல்லி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.