வரிசையினை ஏற்படுத்திய அரசாங்கத்திற்கு வாக்களிக்க வேண்டுமா?; பொதுமக்கள் விசனம்!
.
கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ளவும் நீண்ட வரிசையினை ஏற்படுத்திய அரசாங்கத்திற்கு வாக்களிக்க வேண்டுமா ? என பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்
கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் வவுனியா குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் முன்பாக ஆறு நாட்களிற்கு மேல் அடிப்படை வசதியின்றி வீதி ஓரத்தில் இரவு, பகலாக காத்திருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்திய இந்த அரசாங்கத்திற்கு வாக்களிக்க வேண்டுமா என கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள காத்திருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்
குறித்த திணைக்களத்தின் ஊடாக ஒரு நாளைக்கு 25 நபர்களுக்கும், ஒருநாள் சேவையின் கீழ் 25 நபர்களுக்கும் , ஏற்கனவே சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்து குறிப்பிட்ட காலம் முடிவடைந்தும் கடவுச்சீட்டினை பெறாதவர்கள் 10 நபர்கள் என ஒரு நாளைக்கு 60 நபர்களுக்கு வவுனியா பிராந்திய குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படுகின்றன.
மேலும் ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டினை பெறுபவர்களில் முக்கிய தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலும் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படுகின்றன.
இந்நிலையில் வவுனியா பிராந்திய குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு முன்பாக கடந்த ஆறு நாட்களாக வரிசையில் 600க்கும் மேற்பட்ட மக்கள் கடவுச்சீட்டினை பெறுவதற்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது