‘பயங்கரவாதம்’ எதிர் சிவில் உரிமைகள்; தேர்தல் வாக்குறுதிகளுக்கு தெளிவாக துரோகம் இழைத்துள்ள தேசிய மக்கள் சக்தி!
காலாவதியாகி விட்ட அரசியல் நாடக மேடை!
இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்கிவிட்டு, பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் சிவில் உரிமைகளை சமநிலைப்படுத்தும் ‘உரிமைகளை மையமாகக் கொண்ட ஆட்சிமுறை’ நோக்கிய சட்டத்தைக் கொண்டு வருவதற்கான ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் உறுதிப்பாடு அண்மையில் ‘Newsweek’ இதழுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் விரிவாக விளக்கப்பட்டது.
பயங்கரவாதத்துக்கு எதிராக அரசை பாதுகாக்கும் சட்டமூலம் குறித்த நியாயமான எச்சரிக்கை!
ஆனால் ஜனாதிபதியின் அந்த நல்ல நோக்கத்துடன் அவரது மக்கள் விடுதலை முன்னணி (JVP) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் ‘பயங்கரவாதத்துக்கு எதிராக அரசை பாதுகாக்கும் சட்டமூலம்’ (PSTA) முற்றிலும் முரண்படுகிறது.
உண்மையில், திருத்தப்பட்ட முன்னுரையில் ‘சிவில் உரிமைகளை’ சமநிலைப்படுத்துவதற்கான ஒரு மேலோட்டமான முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதிலும், இந்த முரண்பாடு மிகவும் தெளிவாகத் தெரிகிறது.
பயங்கரவாதத்துக்கு எதிராக அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் குறித்து ஜனாதிபதி அறியாமையின் பேரின்ப நிலையில் இருக்கிறாரா? அல்லது ஜனாதிபதியின் இந்த உறுதிமொழிகளும் இலங்கை அரசியல்வாதிகளுக்கு விருப்பமான வழமையான அரசியல் மிகைப்படுத்தல்கள்தானா? எதுவாக இருப்பினும், பயங்கரவாதத்துக்கு எதிராக அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தின் உள்ளடக்கங்களை ஒவ்வொன்றாகப் பகுப்பாய்வு செய்யும்போது, அச்சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து அதிக எச்சரிக்கை கொள்ள வேண்டியுள்ளது.
அபத்தமாகப் பெயரிடப்பட்டுள்ள அதன் குறுந்தலைப்பு, பயங்கரவாதத்திலிருந்து ‘அரசை’ பாதுகாப்பதே இதன் நோக்கம் எனக் கூறுகிறது. உதாரணமாக, இதனை தென்னாப்பிரிக்காவின் 2004 ஆம் ஆண்டின் 2022 இல் திருத்தப்பட்ட
‘பயங்கரவாதம் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு எதிராக அரசியலமைப்பு ரீதியான ஜனநாயகத்தைப் பாதுகாக்கும்’ சட்டத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.
அடிப்படையில் ஒரு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் நோக்கம் ஜனநாயகத்தையும் அந்த நாட்டின் பிரஜைகளையும் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதாகும். ஒரு சட்டமூலத்தின் குறுந்தலைப்பை கூட சரியாக இட முடியாத அளவுக்கு இலங்கையின் சட்டத்திறன் இவ்வளவு தரக்குறைவாகத்தானா உள்ளது? அதனை விடுத்துப் பார்த்தால், ரணில் விக்ரமசிங்கவின் தூண்டுதலால் உருவான 2018 பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் (CTA) மற்றும் 2023 பயங்கரவாதத்துக்கான எதிரான சட்டமூலம் (ATB) ஆகியவற்றின் பாதையையே அரசாங்கம் விசுவாசத்துடன் பின்பற்ற முயல்வதை கடந்த வாரம் (முன்னைய கட்டுரையில்) இந்தப் பத்தியில் நாம் அவதானித்தோம்.
தெளிவாக வரையறுக்கப்படாத குற்றங்களின் வரம்பு.
எனினும் அதன் உள்ளடக்கங்களை நுணுக்கமாக வாசிக்கும்போது பயங்கரவாதத்துக்கு எதிராக அரசை பாதுகாக்கும் சட்டமூலம் அதன் முந்தைய வடிவங்களை விட மோசமானதா என்ற கேள்வி எழுகிறது.
சில பாதுகாப்பு ஏற்பாடுகள் மர்மமான முறையில் மறைந்துவிட்டன இது குறித்த கரிசனங்களை நான் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசுகிறேன். ஆரம்பத்திலேயே இந்த எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்த வேண்டும்; மோசமாக வரைபு செய்யப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் உண்மையான தேசியப் பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்குமே தவிர உதவாது. குறிப்பாக பயங்கரவாதம் எனும் முதன்மைக் குற்றம் தொடர்பான சிக்கல்களுக்கு அப்பாற்பட்டு, பயங்கரவாதத்துக்கு எதிராக அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தில் உள்ள ஏனைய குற்றங்கள் தொடர்பில் இந்த ஆபத்து எழுகிறது.
பயங்கரவாதத்துக்கான எதிரான சட்டமூலத்தின் பிரிவு 9இல் ‘பயங்கரவாதத்துடன் தொடர்புடைய செயல்கள்’ எனப் பட்டியலிடப்பட்டவை, பயங்கரவாதத்துக்கான எதிரான சட்டமூலம் சவாலுக்குட்படுத்தப்பட்டபோது சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய பயங்கரவாதத்துக்கு எதிராக அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தின் பிரிவு 8 (2) இற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, ஏதேனும் ‘இரகசியத் தகவல்’ ஒரு குற்றத்தைச் செய்யப் பயன்படுத்தப்படும் என்று ‘அறிந்திருந்தும் அல்லது நம்புவதற்கு இடமிருந்தும்’, அத்தகவலை ‘ஒரு நபருக்கு’ வழங்கும் நோக்கத்துடன் சேகரிப்பது பயங்கரவாதத்துக்கு எதிராக அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தின் கீழ் குற்றமாக்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ, பதினைந்து மில்லியன் ரூபாய்க்கு மிகாத அபராதமோ அல்லது இரண்டு தண்டனைகளுமோ விதிக்கப்படலாம்.
ஊடகங்கள் மீதான மோசமான தாக்கம்.
கவலைககுரிய விடயம் என்னவென்றால் ‘இரகசியத் தகவல்’ என்பதை வரையறுக்கும்போது, ‘இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புகுப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு தகவலையும்’ உள்ளடக்கி பயங்கரவாதத்துக்கான எதிரான சட்டமூலம் வழங்கிய அதே தளர்வான வரைவிலக்கணத்தையே பயங்கரவாதத்துக்கு எதிராக அரசை பாதுகாக்கும் சட்டமூலமும் மீண்டும் வழங்கியுள்ளது. ‘பாதிப்பு’ என்பதால் துல்லியமாகக் குறிப்பிடப்படுவது எதுவென்பது எவருக்கும் தெரியாததாகவே உள்ளது.
இந்தக் குறைபாடு நீதிமன்றத்தின் மேலான கவனத்தைப் பெறாதது வருத்தத்திற்குரியது. ‘இரகசியத் தகவல்’ என்பது ‘பொலிஸ் அல்லது ஆயுதப் படைகள் தொடர்பான எந்தவொரு உத்தியோகபூர்வ நடவடிக்கை குறித்த தகவலையும்’ உள்ளடக்குகிறது, இது ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு விரிவானது. ‘பயங்கரவாதக் குற்றம்’ ஒன்றைப் புரியும் நோக்கில் ‘பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை’ சேகரிப்பதைக் குற்றமாக்கலாம் என நீதிமன்றம் காரணம் காட்டியதுடன், இந்த வரைவிலக்கணங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால் இதில் கருத்திற்கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், குற்றமே தெளிவற்ற முறையில் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்த ‘தகவல்களைச் சேகரிப்பதை’ தடை செய்வது துஷ்பிரயோகத்துக்கு வழிவகுக்கும். இதற்கிடையில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கும் கல்வி சார்ந்த வெளியீடுகளுக்கும் பயங்கரவாதத்துக்கான எதிரான சட்டமூலம் வழங்கியிருந்த ‘நல்லெண்ணப் பாதுகாப்பு’ (good faith defence) ஏற்பாடு பயங்கரவாதத்துக்கு எதிராக அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தின் பிரிவு 8-இலிருந்து நீக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. ஏனைய விடயங்களுடன் ஒப்பிடுகையில், இந்த சட்டமூலம் மற்ற அனைத்தையும் விட மோசமானதா என்ற எண்ணத்தைத் தோற்றுவிப்பது இதுவேயாகும்.
உண்மையில், தேசிய மக்கள் சக்தியின் பயங்கரவாதத்துக்கு எதிராக அரசை பாதுகாக்கும் சட்டமூலமானது பிரிவு 9 மற்றும் 10 இல் உள்ள ‘பயங்கரவாதத்தை ஊக்குவித்தல்’ மற்றும் ‘பயங்கரவாத வெளியீடுகள்’ ஆகிய குற்றங்களுக்கு மாத்திரமே நல்லெண்ணப் பாதுகாப்பைக் குறிப்பிடுகிறது. எனினும், அந்தக் குற்றங்களும் கூட சிக்கல் மிக்கவை. ‘பயங்கரவாதத்தை ஊக்குவித்தல்’ என்பது, ஏதேனுமொரு ‘பயங்கரவாதக் குற்றத்தை’ புரியுமாறு பொதுமக்களை ‘நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ’ ஊக்குவிக்கும் எந்தவொரு அறிக்கையையும் வெளியிடுவதையோ அல்லது பேசுவதையோ குற்றமாக்குகிறது. அது குறித்த அசட்டையான போக்கும் இக்குற்றத்தின் ஓர் அங்கமாகும்.
தென்னாப்பிரிக்காவின் மிகக்குறுகிய குற்ற வரையறைகள்.
மேலும் உயர் நீதிமன்றத்தில் இத்தகைய வழக்கு விசாரணைகளின் போது குற்றம் சாட்டப்பட்டவருக்கு இருந்த ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டை (பயங்கரவாதத்துக்கான எதிரான சட்டமூலத்தின் பிரிவு 5(5) ) பயங்கரவாதத்துக்கு எதிராக அரசை பாதுகாக்கும் சட்டமூலமானது நியாயம் கற்பிக்க முடியாத வகையில் நீக்கியுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, பயங்கரவாதத்துக்கான எதிரான சட்டமூலத்தின் பிரிவு 11இன் மூலம் ‘பயங்கரவாத வெளியீடுகள்’ எனும் விரிவான வரையறையைக் குற்றமாக்கிய அதே விடயம் பயங்கரவாதத்துக்கு எதிராக அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தின் பிரிவு 10இல் மீண்டும் இடம்பெற்றுள்ளது. 2018 பயங்கரவாத தடைச்சட்டம் மூலம் ஏனைய விடயங்களில் விமர்சிக்கப்பட்டாலும், அதில் இத்தகையதொரு குற்றம் அறவே இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ‘அசட்டையான’ வெளியீடுகளும் குற்றமாக்கப்பட்டுள்ளன. இங்கு ஏன் அசட்டை எனும் குறைந்த தரம் பயன்படுத்தப்படுகிறது? ‘புரிந்துகொள்ளப் படக்கூடிய’, ‘புரிந்துகொள்ளப்படுவதற்குப் வாய்ப்புள்ள’ போன்ற பொதுவான சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தடைகளின் ஒட்டுமொத்தத் தாக்கம் அச்சமூட்டுவதாக உள்ளது. தென்னாப்பிரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இக்குற்றத்தை மிகவும் கண்டிப்பாக வரையறுக்கிறது. 2002 ஆம் ஆண்டின் திருத்தச் சட்டத்தின்படி, இணையம் உட்பட சட்டவிரோத பயங்கரவாத உள்ளடக்கம் கொண்ட வெளியீடுகளை அகற்றுவதற்கு அல்லது அணுக முடியாதபடி செய்வதற்கு நீதிமன்ற உத்தரவு அவசியமாகும்.
இந்தச் செயன்முறையில் நீதித்துறை மேற்பார்வை இணைக்கப்பட்டுள்ளமை அதனை துஷ்பிரயோகத்திற்கு அப்பாற்பட்டதாக ஆக்குகிறது. ஆனால் இங்கு நிலைமை அவ்வாறில்லை. மேலும், பயங்கரவாதத்துக்கு எதிராக அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தின் ஆங்கில மற்றும் சிங்களப் பதிப்புகளுக்கு இடையே கரிசனைக்குரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. சிங்களமொழிப்பதிப்பே உத்தியோகபூர்வமான பதிப்பாகும். கடந்த வாரம் அவதானித்தபடி, பயங்கரவாதக் குற்றத்தின் மனநிலை (mens rea) குறித்த பிரிவு 3 (1) இல் ‘எண்ணம்’ (intent) என்பதற்குப் பதிலாக ‘நோக்கம்’ (purpose) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை விட அதிக அதிகாரங்கள்.
இந்தக் கரிசனங்களை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ‘நோக்கம்’ (purpose) என்ற சொல் சிங்கள மொழியில் ஒரு குறிப்பிட்ட விளைவு (result) என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் 2026 இல் கொண்டுவரப்படவுள்ள அவசரக் கல்விச் சீர்திருத்தங்களுக்கு (இந்த கட்டுரை மொழி பெயர்க்கப்படும்போது அது அரசாங்கத்தினால் அடுத்து வருடத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது) எதிராகப் போராடும் செயற்பாட்டாளர்கள், இவ்வாறான போராட்டங்களின் போது ‘பொதுப் பயன்பாட்டு இடத்திற்குப் பாரிய சேதம் ஏற்பட்டால்’, அரசாங்கத்தை ஏதேனும் செய்யுமாறு ‘கட்டாயப்படுத்தும் நோக்கத்துக்காக’ போராடியதாகக் கூறி, பயங்கரவாதக் குற்றத்தின் கீழ் தம்மையும் கைது செய்ய முடியும் என வாதிடுகின்றனர்.
உண்மையில், 2018 பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் பிரிவு 3(3) இல் இருந்த ‘அடிப்படை உரிமையைச் சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தும்போது நல்லெண்ணத்துடன் எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும்’ வழங்கப்பட்ட விலக்களிப்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டமூலம் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் ஆகிய இரண்டிலும் முற்றாக நீக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, மாற்றீடு செய்யப்படவுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் இந்த மூன்று சட்டமூலங்களும் அரச முகவர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குகின்றன. 1980களில் மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது தென்னிலங்கைக் கிளர்ச்சியின் போது இத்தகைய அசாதாரணமான அதிகாரங்கள் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் இருந்திருந்தால், துணிச்சலான நீதிபதியின் கைகள் கூடக் கட்டப்பட்டிருக்கும்.
‘தேசிய பாதுகாப்பு’ மற்றும் சிவில் உரிமைகளுக்கு இடையே நீதித்துறைத் தராசைச் சமமாகப் பேணுவது மிகவும் கடினமாக இருந்திருக்கும். கிளர்ச்சியில் ஈடுபட்ட அப்போதைய மக்கள் விடுதலை முன்னணியின் ‘இளைஞர்கள்’ சட்டத்துக்குப் புறம்பாகக் கொல்லப்பட்டிருப்பார்கள் அல்லது ‘சட்டத்தின் போர்வையில்’ காணாமலாக்கப் பட்டிருப்பார்கள். இப்போது ஆட்சியில் இருக்கும் மக்கள் விடுதலை முன்னணி தோழர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் ‘பட்டலந்தை சித்திரவதை முகாம்’ மற்றும் ஏனைய அட்டூழியங்கள் குறித்து தார்மீக ஆத்திரத்துடன் குரல் எழுப்புவது இங்கு விவாதத்துக்குரிய ஒரு விடயமாகும்.
காலாவதியாகி விட்ட அரசியல் நாடக மேடை!
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வாக்குறுதி அளித்த ஜனநாயகத்தின் ‘புதிய விடியல்’ இந்த பயங்கரவாதத்துக்கு எதிராக அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் அல்ல. பொலிஸ் அதிகாரங்களை விரிவுபடுத்துவது தொடர்பான ஏனைய பிரிவுகள் குறித்தும் இன்னும் விவாதிக்கப்பட வேண்டியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஜயவர்தனக்கள், பிரேமதாசக்கள் மற்றும் விக்ரமசிங்ககளைப் போலவே வரலாறு திசாநாயக்கவின் ஜனாதிபதித்துவத்தையும் மிகக் கடுமையாகவே மதிப்பிடும். இன்னும் சொல்லப்போனால் ‘நாம் அரச பயங்கரவாதத்தின் பாதிப்புக்கு உள்ளானவர்கள்’ என அவர்கள் உரக்கக் கூறிக்கொள்வதைக் கருத்திற்கொண்டால் ஒருவேளை இன்னும் கடுமையாகக் கூட மதிப்பிடக்கூடும். நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி இந்த பயங்கரவாதத்துக்கு எதிராக அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை முன்னெடுப்பதை விட அறிவுபூர்வமான ஆலோசனைகளுக்கு இடமளிப்பதே சிறந்தது.
- சண்.பார்த்தீபன்


