வெற்றிமாறனுடன் கூட்டணி! ரஜினிகாந்த்தை அடுத்து இயக்கப்போகும் இயக்குநர் இவரா?..
.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் மீது அவர் மட்டுமின்றி இயக்குநர் லோகேஷும் உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறார். ஏனெனில் இதற்கு முன்னர் அவர் இயக்கியிருந்த லியோ திரைப்படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. எனவே ரஜினிகாந்த்தை வைத்து தரமான சம்பவம் செய்ய வேண்டும் என்பதில் லோகி முனைப்போடு இருக்கிறார் என்று படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது. இந்தச் சூழலில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதற்கும் முன்னதாக வெளியான ஜெயிலர் படம் கொடுத்த வெற்றியை போல் இந்தப் படமும் கொடுக்கும் என்று அவரும், அவரது ரசிகர்களும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. அதேசமயம் வழக்கம்போல் ரஜினியின் நடிப்பை ரசிகர்கள் பாராட்ட தவறவில்லை. மேலும் இதுபோன்ற கதைக்களத்தில் நடித்ததற்கும் ரஜினியை அனைவரும் கொண்டாடியதும் குறிப்பிடத்தக்கது.
கூலி தேவா: வேட்டையன் படத்தை முடித்துவிட்டு தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார் ரஜினி. இதில் அவருடன் அமீர் கான், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துவருகிறார்கள். இந்தப் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டமாக தற்போது சென்னையில் நடந்துவருகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கின்றன.
என்ன கதை?: இப்படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார் சூப்பர் ஸ்டார். ஏற்கனவே தளபதி படத்தில் அவர் இந்த பெயரிலான கதாபாத்திரத்தைத்தான் ஏற்றிருந்தார். அந்தப் படம் இன்றுவரை பலரால் கொண்டாடப்படுகிறது. அந்த சென்ட்டிமென்ட்படி கூலி படமும் பலரது ஃபேவரைட் லிஸ்ட்டில் சேருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அதேபோல் இந்தப் படம் லோகேஷ் கனகராஜின் எல்சியூவில் உருவாகவில்லை; இப்படத்தின் கதையை அவர் பல வருடங்களுக்கு முன்பே எழுதியிருந்ததாகவும் கூறியிருக்கிறார்.
ஜெயிலர் 2: கூலி படத்தை முடித்துவிட்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் ரஜினி. இதன் அறிவிப்பு வீடியோ கடந்த பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாகம் போலவே இரண்டாவது பாகமும் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தையும் முடித்துவிட்டு மணிரத்னத்துடன் அவர் இணைய வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
வெற்றிமாறனுடன் கூட்டணி?: இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இதுவரை தோல்வி படமே கொடுக்காமல்; இந்திய அளவில் முக்கியமான இயக்குநராக மாறியிருக்கும் வெற்றிமாறன் ரஜினிக்கு கதை சொல்லியதாகவும்; அந்தக் கதையில் நடிக்க ரஜினி சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும்; அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகலாம் என்று பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. முன்னதாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவிருந்த படத்துக்கு ரஜினி நோ சொல்லிவிட்டதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளியாகியிருந்தது நினைவுகூரத்தக்கது.