மோடி ஆட்சி: விழாக்கோலம் பூண்டுள்ள டில்லி – உலகத் தலைவர்கள் பங்கேற்பு.
மூன்றாவது முறையாகவும் நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இந்தியாவில் மீண்டும் மோடி ஆட்சி: விழாக்கோலம் பூண்டுள்ள டில்லி – உலகத் தலைவர்கள் பங்கேற்பு.
பதவியேற்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (09) மாலை 6 மணிக்கு புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற உள்ளது. இதன்போது மோடியின் அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது.
இதன் காரணமாக டில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் ட்ரோன் கமராக்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மலைத் தீவு ஜனாதிபதி முகமது மூயிஸ், சீசெசல்ஸ் துணை ஜனாதிபதி அகமது அஃபிப், மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜூக்னாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் எனும் பிரசண்டா, பூட்டான் பிரதமர் ஷெரிங் தோப்கே ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்திய – மாலைத்தீவு இருதரப்பு உறவில் விரிசல் காணப்படுகின்ற நிலையில், பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பு மாலைத்தீவு ஜனாதிபதி முகமது மூயிஸிற்கு விடுக்கப்பட்டுள்ளது. அவரும் அழைப்பை ஏற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த (05.06) புதன்கிழமை முகமது மூயிஸ் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவதற்கு அவருடன் இணைந்து பணியாற்றவும் விருப்பம் தெரிவித்தார்.
அவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 17ஆம் திகதி மாலைத்தீவு ஜனாதிபதியாக தெரிவானதுடன், சீனாவின் ஆதரவாளராகவும் கருதப்படுகிறார்.
முகமது மூயிஸின் பதவியேற்பின் பின்னரே இருநாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவிலும் கடுமையான விரிசல்கள் ஏற்பட்டன. குறிப்பாக லட்சத் தீவு விவகாரத்தால் மாலைத்தீவில் இருந்த இந்திய இராஜதந்திரகள் மீள அழைக்கப்பட்டனர். அதன் காரணமாக இந்தியர்கள் மாலைத்தீவுக்கு செல்வதையும் குறைத்துக்கொண்டனர்.
முகமது மூயிஸின் பதவியேற்றதன் பின்னர் முதல் உத்தியோகப்பூர்வ இந்தியப் பயணமுத் இதுவாகும்.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக பங்காளதேஷ் பிரதமர் ஹசீனா நேற்றைய தினமே புதுடில்லிக்கு வருகைத்தந்துள்ளார்.
மேலும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ள விருந்திலும் உலக தலைவர்கள் கலந்துகொள்வார்கள் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.