அமெரிக்கா - ஈரான் இடையே மத்தியஸ்தராக பாகிஸ்தான் உருவெடுக்கிறதா?
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் திங்களன்று தொலைபேசியில் பேசினார்.
ஓர் அண்டை நாடாகவும் சகோதர தேசமாகவும்இ துணிச்சலான இரானிய மக்களுக்கு பாகிஸ்தானின் ஒற்றுமையை வெளிப்படுத்தியது.
அமெரிக்கா மற்றும் ஈரானின் மூத்த தலைவர்களின் சந்திப்பை இஸ்லாமாபாத்தில் நடத்தலாம் என்று பாகிஸ்தான் முன்மொழிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அமெரிக்காவோ அல்லது இரானோ இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், பாகிஸ்தான் ஒரு மத்தியஸ்தராக உருவெடுத்திருப்பது ஆச்சர்யமளிக்கவில்லை என்று பல அமெரிக்க உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
பாகிஸ்தான் ஈரானுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது, ஷாபாஸ் ஷெரீப் அரசாங்கம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் அமெரிக்க நிர்வாகத்துடன் இணக்கமான உறவைக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீர் கடந்த ஆண்டு ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் டிரம்பைச் சந்தித்தார்.
செப்டம்பர் மாதப் பயணத்தின் போது, ஜெனரல் முனீருடன் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பும் சென்றிருந்தார்.
இந்தியாவுடனான மோதல்களின் போது டிரம்ப் மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சிகளுக்காக, பாகிஸ்தான் கடந்த ஆண்டு ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது. ஷெரீப்பின் இந்த நடவடிக்கை டிரம்ப் நிர்வாகத்தில் உள்ள பலருக்கும் பிடித்திருந்தது.
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் திங்களன்று தொலைபேசியில் பேசினார்.
ஷாபாஸ் ஷெரீப் தனது எக்ஸ் தளப் பதிவில், "எனது சகோதரர் அதிபர் முனைவர் மசூத் பெசெஷ்கியானுடன் பேசி அவருக்கு ஈத்-உல்-பித்ர் மற்றும் நவ்ரூஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
"ஓர் அண்டை நாடாகவும் சகோதர தேசமாகவும், துணிச்சலான இரானிய மக்களுக்கு பாகிஸ்தானின் ஒற்றுமையை வெளிப்படுத்தினேன். விலைமதிப்பற்ற உயிர்களை இழந்ததற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களுக்காக பிரார்த்தித்தேன்" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
"நாங்கள் வளைகுடா பிராந்தியத்தின் தீவிரமான சூழல் குறித்து விவாதித்தோம். பதற்றங்களைக் குறைக்கவும், பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் மற்றும் ஒரு விவேகமான தீர்வைக் காணவும் அவசரத் தேவை உள்ளது என்பதில் இருவரும் உடன்பட்டோம்." "இஸ்லாமிய சமூகத்தினரிடையே ஒற்றுமை மிகவும் முக்கியமானது என்றும், அமைதியை மேம்படுத்துவதில் உதவிகரமான பங்கை ஆற்ற பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளது என்றும் நான் கூறினேன்" என ஷாபாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.
- இரயீவன் குணா


