'ஓமாஹாவின் மிருகம்' (La bête d'Omaha) என அழைக்கப்பட்ட ஜெர்மானியப் படைவீரர் ஹெய்ன்ரிக் செவர்லோ (Heinrich Severloh)
நோர்மண்டித் தரையிறக்கம்
நோர்மண்டித் தரையிறக்கம் : 'ஓமாஹாவின் மிருகம்' (La bête d'Omaha) என அழைக்கப்பட்ட ஜெர்மானியப் படைவீரர் ஹெய்ன்ரிக் செவர்லோ (Heinrich Severloh)
1944 ஜூன் 6 அன்று நடைபெற்ற நோர்மண்டித் தரையிறக்கத்தின் (டி-டே) 82-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் வேளையில், வரலாற்றில் தடம் பதித்த சில வீரர்களைப் பற்றிய நினைவுகள் மீண்டும் எழுகின்றன. அவர்களில் ஒருவர்தான் ஜெர்மானியப் படைவீரரான ஹெய்ன்ரிக் செவர்லோ. இவர் தனி ஒருவராக சுமார் 2,000-க்கும் மேற்பட்ட நேசநாட்டுப் படை வீரர்களைக் கொன்றோ அல்லது காயப்படுத்தியோ இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
பிரான்சுக்கு விடுதலையைப் பெற்றுத் தருவதற்காக நேச நாடுகளின் (Alliés) வீரர்கள் பலரும் தங்களின் அதீத வீரத்தை வெளிப்படுத்தினர். அதே வேளையில், நாஜி ஜெர்மனியின் படைகளில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் தனிப்பெரும் கவனத்தைப் பெற்ற ஒருவர்தான் ஹெய்ன்ரிக் செவர்லோ. 'ஓமாஹாவின் மிருகம்' (La bête d’Omaha) என்று பரவலாக அழைக்கப்படும் இவர், 2000-ஆம் ஆண்டில் வெளியான தனது சுயசரிதையில் ("WN 62 : Mémoires à Omaha Beach Normandie, 6 juin 1944"), படையெடுப்பின் போது 2,000-க்கும் மேற்பட்ட நேச நாட்டு வீரர்களைக் கொன்றதாகவோ அல்லது காயப்படுத்தியதாகவோ குறிப்பிட்டுள்ளார்.
முதல் உலகப் போரின் முடிவில் 1923-ஆம் ஆண்டு வடக்கு ஜெர்மனியில் பிறந்த இவர், தனது 18 வயதிலேயே ஜெர்மானிய ராணுவமான 'வெர்மாக்ட்'டில் (Wehrmacht) இணைந்தார். பின்னர் பிரான்சுக்கும், அதைத் தொடர்ந்து 1942-இல் இரண்டாம் உலகப் போரின் கிழக்கு முனையிலும் (Front de l'est) பணியமர்த்தப்பட்டார். 1943-ஆம் ஆண்டில்தான் அவர் 352-வது காலாட்படைப் பிரிவின் கீழ் நார்மண்டிக்கு வந்து சேர்ந்தார்.
அமெரிக்கப் படைகள் நோர்மண்டியில் தரையிறங்கியபோது, நேச நாடுகளின் முதல் கட்டப் படகுகள் வந்திறங்கிய பகுதியிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு துப்பாக்கிச் சூடு நடத்தும் மையத்தில் இவர் நிலை கொண்டிருந்தார். 'எம்ஜி42' (MG42) ரக இயந்திரத் துப்பாக்கியைக் (Mitrailleuse) கொண்டிருந்த அவர், நார்மண்டி கடற்கரையில் தரையிறங்கிய அமெரிக்க வீரர்களை நோக்கிப் பல மணி நேரமாகக் கண்மூடித்தனமாகச் சுட்டார். அவரது தரவுகளின்படி, சுமார் 12,500-க்கும் மேற்பட்ட தோட்டாக்களை அவர் சுட்டுத் தீர்த்துள்ளார்.
தறியிறக்கத்துக்கு அடுத்த நாள் தனது துப்பாக்கிச் சூடு மையத்திலிருந்து தப்பியோடிய அவர், பின்னர் கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில் அமெரிக்காவில் சிறைத்தண்டனை அனுபவித்த அவர், பின்னர் கட்டாயக் கூலி வேலைக்காக (Travaux forcés) இங்கிலாந்துக்கு மாற்றப்பட்டார்.
அவரது தந்தை பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் விடுத்த கோரிக்கையின் பேரில்தான், 1947-ஆம் ஆண்டில் அவர் மீண்டும் ஜெர்மனிக்கும் தனது சொந்தப் பண்ணைக்கும் திரும்ப முடிந்தது. அதன் பின் மக்களால் வெறுக்கப்பட்ட ஒருவரராக, குற்ற உணர்வுடன் தனது பிற்காலத்தை கழித்த அவர் 2006 ஜனவரி 14 அன்று தனது 82-வது வயதில் காலமானார்.
- சிவா சின்னப்பொடி


