புதுடெல்லியில் இந்தியப் பிரதமருடன் இணைந்து நடத்திய கூட்டு ஊடக சந்திப்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறிய உறுதிமொழி!
.
“இந்தியாவின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், எங்கள் நிலத்தை எந்த வகையிலும் பயன்படுத்த, எவரையும் அநுமதிக்கமாட்டோம்.”
– இது புதுடெல்லியில் இந்தியப் பிரதமருடன் இணைந்து நடத்திய கூட்டு ஊடக சந்திப்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறிய உறுதிமொழியாகும்.
இலங்கையில் ஆட்சித் தலைமையை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு தலைவரும், புதுடெல்லிக்கு பயணம் மேற்கொள்ளுகின்ற போது, இந்த உறுதிமொழியை வழங்குவது வழமையான ஒன்று.
இது ஜே. ஆர்.ஜயவர்தனவின் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகின்ற ஒரு மரபு என்றும் கூறலாம்.
இந்தியாவுக்கு அருகே அமைந்திருக்கின்ற இலங்கையிடம், இப்படி ஒரு உறுதிமொழியை பெற்றுக் கொள்வது புதுடெல்லியின் விருப்பத்துக்குரிய விடயங்களில் ஒன்றாகும்.
இந்த உறுதிமொழியை அவர்கள் திரும்பத் திரும்ப கேட்பார்கள். ஒவ்வொரு முறை கேட்கும் போதும், இந்தியாவுக்கு அது மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அநுரகுமார திசாநாயக்க செல்வாக்குமிக்க வேட்பாளராக மாறி வருகிறார் என அறிந்து கொண்டிருந்த நிலையில், இந்திய அரசாங்கத்தினால் அவர் புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அப்போது அவரிடம் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு விரோதமான, எந்த செயலையும் முன்னெடுக்கக் கூடாது என்று இறுக்கமான தகவல், அநுரகுமார திசாநாயக்கவிடம் பரிமாறப்பட்டது.
அந்தச் சந்திப்பின் போதும் கூட, அநுரகுமார திசாநாயக்க இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கையினால் ஆபத்து ஏற்பட இடமளிக்கமாட்டோம் என உறுதியளித்திருந்தார்.
இப்போது அவர் ஜனாதிபதியாகி விட்ட நிலையில், அவரிடம் இருந்து உத்தியோகபூர்வமாக அந்த உறுதிமொழியை பெற்றுக் கொள்வதில், புதுடெல்லி உறுதியாக இருந்தது.
அநுரகுமார திசாநாயக்க புதுடெல்லியில் ‘ஹைதராபாத் ஹவுஸில்’ நடந்த செய்தியாளர் சந்திப்பில், அதனை உறுதிப்படுத்தினார்.
இது இந்தியாவுக்கு திருப்தியை தருகின்ற ஒரு விடயமாக இருந்தாலும், நிரந்தரமான அல்லது நிலையான நம்பிக்கையை கொடுக்குமா என்பது சந்தேகத்துக்குரிய ஒன்று.
1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்திலேயே இதற்கான எழுத்துமூல உறுதிமொழி கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனாலும், கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த ஜனாதிபதிகள் ஒவ்வொருவரும், இத்தகைய உறுதி மொழியை இந்தியாவிடம் கொடுத்து வந்திருக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் வெளிப்படையாக இந்தியாவின் நலன்களுக்கு எதிராக செயல்படாது போனாலும், இந்தியாவின் நலன்களை சவாலுக்கு உட்படுத்துகின்ற பல விடயங்களுக்குத் துணை போயிருந்தார்கள்.
குறிப்பாக சீனாவை சார்ந்த விடயங்களில் , முன்னைய ஆட்சியாளர்களின் தீர்மானங்கள், இந்தியாவை திருப்திப்படுத்தியது என சொல்ல முடியாது.
மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் தான், சீனா வலுவாக காலுன்றத் தொடங்கியது.
நல்லாட்சி அரசின் காலத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை கையில் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு, அதன் பொருளாதாரத் தலையீடு விரிவடைந்தது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு சீனா பெற்றுக் கொண்டிருப்பது, இந்தியாவுக்கு ஒரு நீண்ட கால அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் இருந்து வருகிறது .
அத்தகைய அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கணித்து, அதனை தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் இருந்தபோதும், இந்தியா அதனை பயன்படுத்திக் கொண்டிருக்கவில்லை .
அதேவேளை, இலங்கையில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு தலைவர்களும், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய செயல்களை அனுமதிக்கமாட்டோம் என வாக்குறுதி பெற்றுக் கொள்வதை இந்தியா வழமையாக்கி இருக்கிறது .
அந்த வழமையை அநுரகுமார திசாநாயக்க மாற்றவில்லை . ஆனால், இந்த வாக்குறுதி மட்டும் இந்தியாவிற்கு போதுமானதாக இருக்குமா என்பது சந்தேகம் .
இதனுடன் இந்தியா திருப்திப்பட்டுக் கொள்ளும் என்றும் எதிர்பார்க்க முடியாது .
ஏனென்றால், சீனாவுடன் அநுரகுமார திசாநாயக்க கொண்டிருக்கின்ற உறவுகள், இந்தியாவை அப்படி ஒரு நிலைக்குள் வைத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .
முன்னைய அரசாங்கங்களை விட, தற்போதைய அரசாங்கம் சீனா விடயத்தில் மென்போக்கை கடைபிடிக்கும் என்பது ஒரு அனுமானமாக இருக்கிறது .
இன்னமும் அநுரகுமார திசநாயக்கவோ அல்லது இலங்கையின் வேறு முக்கியமான அமைச்சர்களோ சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை . சீனாவுடன் உயர்மட்ட பேச்சுக்களை நடத்தவும் இல்லை .
அவ்வாறான பேச்சுக்கள், சந்திப்புகள் நடக்கின்ற போது தான், சீனாவை இந்த அரசாங்கம் எவ்வாறு கையாளப் போகிறது என்பது தொடர்பான தெளிவான ஒரு வரைபடம் கிடைக்கும்.
அதற்கு முன்னர், இலங்கையிடமிருந்து இந்த உத்தரவாதத்தை பெற்றுவிட வேண்டும் என்பதில், புதுடெல்லி உறுதியாக இருந்தது .
இது அநுரகுமார திசாநாயக்க விடயத்தில் மாத்திரமன்றி, ஒவ்வொரு ஜனாதிபதிகள் பதவியேற்கின்ற போதும், இவ்வாறான சூழலையே இந்தியா எதிர்பார்க்கிறது .
இவ்வாறான உத்தரவாதத்தை கொடுக்கின்ற இலங்கை தலைவர்கள், இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுகிறார்களா, இல்லையா என்ற கேள்வியும் இருக்கிறது.
அப்படிப்பட்ட கேள்வி இல்லை என்றால், கடந்த காலங்களில் இந்தியாவுடன் இலங்கை அரசாங்கம் முரண்படுகின்ற நிலை ஏற்பட்டிருக்காது .
அண்மையில் சீனத் தூதுவர் கீ சென்ஹொங் இரண்டு விடயங்களில் இந்தியாவின் தலையீடு தொடர்பாக மறைமுகமான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார் .
பாக்கு நீரிணையில் உள்ள மூன்று தீவுகளில், கலப்பு மின் திட்டங்களை உருவாக்கும் ஒப்பந்தம் சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பின்னர், பாதுகாப்பு காரணத்தைக் காட்டி ஒரு நாடு கொடுத்த அழுத்தங்களை அடுத்து, அந்த திட்டம் மீளப் பெறப்பட்டமை சீனாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது என்று அவர் குறிப்பிட்டிருந்தார் .
அதுபோல, சீனாவின் ஆய்வுக் கப்பல்கள், இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்வதை தடை செய்து அரசாங்கம் பிறப்பித்த உத்தரவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் குழப்பத்தை ஏற்படுத்தியது என்று சீனத் தூதுவர் அண்மையில் கூறியிருந்தார் .
இந்தியாவின் அழுத்தங்களின் பேரிலேயே அது நிகழ்ந்தது என்றும், மாலைதீவு அரசாங்கம் சீன ஆய்வுக் கப்பலை அனுமதிக்கின்ற போது, இலங்கை அரசாங்கம் ஏன் அதனை அனுமதிக்கக் கூடாது என்றும் சீனத் தூதுவர் கேள்வி எழுப்பினார் .
இவ்வாறான செயற்பாடுகளால் இலங்கைக்கு சீனாவுக்கும் இடையில் அவ்வப்போது விரிசல்கள் ஏற்படுகின்றன என்பதை சீன தூதுவரின் அந்த கருத்து வெளிக்காட்டி இருந்தது .
அதேவேளை, இவ்வாறான விடயங்களில் இந்தியாவின் தலையீடுகள், அழுத்தங்கள், இலங்கைக்கு இருந்தன என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் .
இந்தியாவின் பாதுகாப்புக்கு இடையூறு அல்லது பாதிப்பை ஏற்படுத்தமாட்டோம் என வாக்குறுதி கொடுத்திருந்த இலங்கையின் தலைவர்கள், அந்த வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் செயல்பட்டிருந்தால் இவ்வாறான தலையீடுகள் அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது .
எனவே, இந்தியாவிடம் கொடுக்கப்படுகின்ற வாக்குறுதிகள் என்பது மெய்யானதா என்பது கேள்விக்குறி .
இத்தகைய சூழல்கள் இருப்பதால்தான், ஒவ்வொருமுறை பதவிக்கு வரும் அரசாங்கத்திடம் இருந்தும் இந்தியாவின் நலன்களை பாதுகாக்கின்ற உத்தரவாதங்களை பெற்றுக் கொள்வதற்கு புதுடெல்லி விரும்புகிறது .
அதனையும் தாண்டி, நடக்கின்ற விவகாரங்களை அது தனது மேலாதிக்க பலத்தைக் கொண்டு சமாளித்துக் கொள்கிறது .
கடந்த காலங்களைப் போலவே, எதிர்காலத்திலும் நிகழுமா இல்லையா என்பது எதிர்வு கூறக்கூடிய விடயம் அல்ல .
ஆனால், அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறுகின்ற போது – எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்களை புரிந்து வைத்திருக்கும்.
மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கமும் சரி, கோட்டாபய ராஜபக் ஷ அரசாங்கமும் சரி -இந்தியாவுடன் இணங்கி செயல்படாத நிலையில் அவற்றின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா பங்கு வகித்ததாக ஊகங்கள் உள்ளன .
அப்படியான நிலையில், அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம், ஏற்கெனவே சீன சார்பு முத்திரையுடன் இருக்கின்ற சூழலில், இந்திய நலன்களுக்கு விரோதமாக செயல்படுகின்ற நிலை அவதானிக்கப்படுமேயானால், அதனை புதுடெல்லி சகித்துக் கொண்டிருக்கும் எனவும் எதிர்பார்க்க முடியாது .
இத்தகைய சூழலில், இலங்கையின் புதிய அரசாங்கம் இந்தியா தொடர்பாக, அதற்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் தொடர்பாக, மிக கவனமாக நடந்து கொள்ள முற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
இவ்வாறான ஒரு முன்னெச்சரிக்கை உணர்வு இந்த அரசாங்கத்துக்கு இருக்குமேயானால், அது இந்தியாவுக்கு கிடைத்துள்ள ஒரு முக்கிய வெற்றியாகவும் இருக்கும் .
-ஹரிகரன் Virakesari