ஜெர்மனியில் நடைப்பயணிகள் மீது திட்டமிட்டு மோதிய வாகனம்: 2 பேர் உயிரிழப்பு; ஓட்டுநர் கைது!
,
ஜெர்மனியின் கிழக்குப் பகுதியில் உள்ள லீப்சிக் (Leipzig) நகரின் மையப்பகுதியில், மக்கள் கூட்டத்திற்குள் வாகனம் ஒன்று புகுந்து விபத்தை ஏற்படுத்தியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஓட்டுநரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை மதிய வேளையில், லீப்சிக் நகரின் மையப்பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு நடைபாதையில், மகிழுந்து (வாகனம்) ஒன்று பாதசாரிகள் மீது மிக வேகமாக மோதியது.
இதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பதை அந்நகர முதல்வர் பர்கார்ட் ஜங் (Burkhard Jung) உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இருவர் பலத்த காயமடைந்துள்ளதாகவும், சுமார் 20 பேர் இலேசான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்திற்குக் காரணமான 33 வயதுடைய ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நபரைக்காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்துள்ளனர். இவர் ஜெர்மனியிலேயே பிறந்து, அதே பகுதியில் வசித்து வரும் நபர் எனத் தெரியவந்துள்ளது.
இது ஒரு சாதாரண விபத்தல்ல, இது திட்டமிட்ட ஒரு "கொலைவெறிச் செயல்" என சாக்சனி (Saxony) மாகாணத்தின் உள்துறை அமைச்சர் அர்மின் ஷூஸ்டர் (Armin Schuster) தெரிவித்துள்ளார். ஜெர்மன் மொழியில் இதனை 'அமோக்ஃபார்ட்' (Amokfahrt) என்று அழைக்கிறார்கள். அதாவது, மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலோ அல்லது கட்டுக்கடங்காத கோபத்திலோ, கண்ணில் படுபவர்களையெல்லாம் கண்மூடித்தனமாகத் தாக்கும் ஒரு வெறிச்செயலாக இது இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
காவல்துறையினர் இது தொடர்பாகக் கொலை மற்றும் கொலை முயற்சிக்கான வழக்கைப் பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தற்போதைய நிலையில், இதற்குப் பின்னால் ஏதேனும் அரசியல் நோக்கம் உள்ளதா என்பது குறித்து எவ்விதத் தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஜெர்மனியில் பொதுமக்கள் மீது வாகனங்களை மோதச் செய்யும் தாக்குதல்கள் தொடர்கதையாகி வருகின்றன: கடந்த 2016-ஆம் ஆண்டு தலைநகர் பெர்லினில், தீவிரவாதி ஒருவர் சரக்கு வாகனத்தைப் பொதுமக்கள் மீது மோதியதில் 13 பேர் பலியாகினர்.
2024-ஆம் ஆண்டில், மக்டேபர்க் (Magdeburg) நகரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த மற்றொரு வாகனத் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அந்த வரிசையில் தற்போதைய சம்பவம் ஜெர்மனி மக்களை மீண்டும் பெரும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.
- சிவா சின்னப்பொடி


