வேலணையை அச்சுறுத்திய மாட்டு திருட்டுக் கும்பல் கூண்டொடு கைது!
பிரதான சூத்திரதாரி வேலணை வங்களாவடியில் வைத்து 2300 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - வேலணையை அச்சுறுத்திவந்த பிரதான மாட்டு திருட்டுக் கும்பல் கூண்டோடு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஊர்காவற்றுறை பொலிசார் திருட்டில் ஈடுபடுவோர் மிகக் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வேலணை பிரதேசத்தை நீண்ட நாள்களாக அச்சுறுத்தி வந்த மாடு கடத்தல் மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.
வேலணை, புங்குடுதீவு, அல்லைப்பிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் திட்டமிட்ட வகையில், நீண்டகாலமாக பண்ணையாளர்களின் பெறுமதிமிக்க கறவை மாடுகள் மற்றும் வீடுகளை உடைத்து நகைகள் உள்ளிட்ட பெறுமதிவாய்ந்த பொருட்களை திருடிவந்த குழுவே கடந்த இரு நாள்களில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் நீண்ட நாள்களாக தேடப்பட்டுவந்த நிலையில், பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை, பருத்தியடைப்பு ஆகிய பகுதிகளில் இருவர் நேற்றுமுன்தினம் ((13) கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த திருட்டுக்களின் பிரதான சூத்திரதாரி வேலணை வங்களாவடியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டிருந்ததுடன் அதன் தொடர்ச்சியாக மொத்தமாக ஏழு நபர்கள் கைதாகியுள்ளனர். குறிப்பாக பிரதான சூத்திரதாரி கைதாகும்போது அவரிடமிருந்து 2300 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் குறிப்பிட்டனர்.


