புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் தர்பூசணி - நீங்களும் வாங்கி சாப்பிடலாமே!
புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் போன்ற சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கும் லைகோபீன் சேர்மம் தர்பூசணியில் இருக்கின்றது.

புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது: தர்பூசணியில் காணப்படும் லைகோபீன் (lycopene) மற்றும் குக்குர்பிடசின் ஈ (cucurbitacin E) உள்ளிட்ட பல தாவர சேர்மங்கள் புற்றுநோய் எதிர்ப்பு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. லைகோபீன் உட்கொள்ளல் புரோஸ்டேட், பெருங்குடல் புற்றுநோய்கள் போன்ற சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன என NCBI இதழில் வெளியான ஆய்வு கூறுகிறது. செல்களின் பிரிவை ஊக்குவிக்கும் ஹார்மோனான இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணியின் (IGF) இரத்த அளவைக் குறைப்பதன் மூலம் லைகோபீன் செயல்படுவதாக நம்பப்படுகிறது. கூடுதலாக, குக்குர்பிடசின் ஈ உடலின் செயல்முறையை ஊக்குவிப்பதன் மூலம் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சிகளை தடுக்கிறது.
இரத்த அழுத்தத்தை குறைக்கிறது: நாள்பட்ட நோய் மற்றும் உயிரிழப்பிற்கு உயர் இரத்த அழுத்தம் முக்கிய காரணியாக இருக்கிறது. தர்பூசணி சிட்ரூலினின் (citrulline) நல்ல மூலமாகும். இது உடலில் அர்ஜினைனாக மாற்றப்படுகிறது. இந்த இரண்டு அமினோ அமிலங்களும் நைட்ரிக் ஆக்சைடு உற்பத்திக்கு உதவுகின்றன. நைட்ரிக் ஆக்சைடு என்பது ஒரு வாயு மூலக்கூறு ஆகும். இவை இரத்த நாளங்களைச் சுற்றியுள்ள சிறிய தசைகள் தளர்ந்து விரிவடைய காரணமாகிறது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க வழிவகுக்கிறது. தர்பூசணி உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தம் மற்றும் தமனி விறைப்பைக் குறைக்கும்.
சரும பளபளப்பு: சரும ஆரோக்கியத்திற்கு வைட்டமின் ஏ மற்றும் சி முக்கியமாகும். இவை தர்பூசணியில் நல்லளவில் உள்ளன. வைட்டமின் சி, உடலுக்கு கொலாஜன் என்ற புரதத்தை உருவாக்க உதவுகிறது என NCBI இதழில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. இது சருமத்தை மென்மையாக்கவும், தலைமுடியை வலுவாகவும் வைத்திருக்கும். தர்பூசணி உட்கொள்வதால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் வறண்ட சரும பிரச்சனை குறையும். ஆரோக்கியமான சருமத்திற்கு வைட்டமின் ஏ அவசியமானது. இவை, சரும செல்களை உருவாக்கவும் சரிசெய்யவும் உதவுகிறது.
செரிமானத்தை எளிமையாக்குகிறது: நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து செரிமானத்திற்கு அவசியமான ஒன்று. தர்பூசணியில் 95% நீர்ச்சத்தும், நல்லளவில் நார்ச்சத்தும் இருப்பதால் இது உணவை எளிதில் செரிமானம் செய்ய உதவுகிறது. நார்ச்சத்து குடலை சீராக வைத்திருக்கும், அதே நேரத்தில் தண்ணீர் செரிமானப் பாதை வழியாக கழிவுகளை நகர்த்த உதவுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதய ஆரோயத்தை பாதுகாக்கிறது: தர்பூசணியில் உள்ள பல ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றனர். உலகளவில் ஏற்படும் இறப்புக்கு இதய நோய் ஒரு முக்கிய காரணமாகும். இதற்கு நாம் உண்ணும் உணவுகள் உட்பட வாழ்க்கை முறை காரணிகளாக இருக்கின்றன. இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.
தர்பூசணியில் உள்ள லைகோபீன் கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. இவை இரண்டும் இருதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. தர்பூசணியில் சிட்ரூலின் என்ற அமினோ அமிலமும் உள்ளது. இது உடலில் நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்கவும், இரத்த நாளங்கள் விரிவடைந்து இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும் என NCBI இதழில் வெளியான ஆய்வு கூறுகிறது.
தர்பூசணியில் உள்ள பிற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் ஏ, பி6 மற்றும் சி ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் இதயம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
இரவில் சாப்பிடலாமா?: தர்பூசணி அதிகளவு தண்ணீரைக் கொண்டிருப்பதாலும், உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது என்பதாலும், தூங்குவதற்கு முன் தர்பூசணி சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்று எடுத்துக்கொள்ளலாம்.