வடக்கு, கிழக்கு மக்களை அழித்த ராஜபக்ஷர்களுக்கும் பிள்ளையானுக்கும் ஒத்துழைப்பு வழங்கியவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை - பிமல் ரத்நாயக்க
பிள்ளைகளை கடத்தி, கப்பம் பெற்ற பிள்ளையானின் மேடையிலும் இவர் இருந்துள்ளார்.

2005ஆம் ஆண்டு ரணில் - சந்திரிக்காவை தோற்கடிப்பதற்காகவே ராஜபக்ஷர்களுக்கு ஆதரவளித்தோம். வடக்கு மற்றும் கிழக்கு மக்களை அழித்த ராஜபக்ஷர்களுக்கும் பிள்ளையானுக்கும் ஒத்துழைப்பு வழங்கியவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8) நடைபெற்ற முறையற்ற வகையில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சுட்டிக்காட்டி உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நான் இந்த பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் பல விடயங்களை குறிப்பிட்டேன். ஆனால், அவர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து நிதி பெற்ற விடயத்தை மாத்திரம் குறிப்பிடுகிறார். மஹிந்த ராஜபக்ஷவுடன் நாங்கள் 2006 - 2009 வரையான காலப்பகுதியில் ஒன்றிணைந்து செயற்படவில்லை. இது அரசியல் சத்தியம்.
தமிழ் அரசியல் கட்சி என்று குறிப்பிட்டுக்கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இல்லாதொழித்தவர்களுடன் ஒன்றிணைந்து தான் இவர்கள் செயற்பட்டார்கள். இவர்கள் ராஜபக்ஷர்களுடன் ஒன்றிணைந்து 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் வாக்கு கோரினார். பிள்ளைகளை கடத்தி, கப்பம் பெற்ற பிள்ளையானின் மேடையிலும் இவர் இருந்துள்ளார்.
2005ஆம் ஆண்டு எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு தான் ராஜபக்ஷர்களுக்கு ஆதரவளித்தோம். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிலைக்கு கவலையடைகிறேன். சபாநாயகரை இவர் மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சிக்கிறார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் இவ்வாறு முறையற்ற வகையில் செயற்படவில்லை. மூன்றாம் தரப்பு அரசியல்வாதி போல் செயற்படவில்லை.
2005ஆம் ஆண்டு ரணில் - சந்திரிக்காவை தோற்கடிப்பதற்காகவே ராஜபக்ஷர்களுக்கு ஆதரவளித்தோம். இதன் பின்னர் ராஜபக்ஷர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மக்களை அழித்த ராஜபக்ஷர்களுக்கும், பிள்ளையானுக்கும் ஒத்துழைப்பு வழங்கியவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்றார்.