மஹிந்தவிற்கு காத்திருக்கும் உயிரச்சுறுத்தல் ; அனுர அரசு பொறுப்பு கூறல் வேண்டும்!!
.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இத்தகைய பின்னணியில் இராணுவ பாதுகாப்பை இந்த அரசாங்கம் முழுமையாக நீக்கியுள்ளமை தவறான தீர்மானமாகும் என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
மேலும், மகிந்த ராஜபக்சவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் இந்த அரசாங்கம்தான் ஏற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,பிரபுக்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு தரப்பினரிடம் அறிக்கை பெற்றுக் கொண்டுள்ளது.
மேலும் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பாக புலனாய்வு பிரிவு சமர்ப்பித்த அறிக்கைகளை கவனத்திற் கொள்ளாமல் அரசாங்கம் முறையற்ற வகையில் இராணுவ பாதுகாப்பை முழுமையாக நீக்கியுள்ளது.
மகிந்த ராஜபக்சவுக்கு 100 அல்ல 1000 இராணுவத்தினரை பாதுகாப்புக்கு அமர்த்தினாலும் குறையேதுமில்லை. ஏனெனில் இராணுவத்தினர் தமது சொந்த ஊருக்கு சவப்பெட்டியில் செல்லும் காலத்தை அவர் தான் முடிவுக்கு கொண்டு வந்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் மகிந்த ராஜபக்சவை ஒப்பிட முடியாது. ஏனெனில் மகிந்த ராஜபக்ச தேசியத்தை பாதுகாப்பதற்காக கடுமையான தீர்மானங்களை எடுத்தார்.
எனவே மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக பிரிவினைவாத சக்திகள் தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் இன்றளவும் செயற்படுகின்றன.
மகிந்த ராஜபக்சவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அரசாங்கம் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.