கல்முனை மற்றும் மருதமுனை உணவகங்களில் அதிரடிச் சோதனை!
மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவுகள் அழிப்பு!
கல்முனை மற்றும் மருதமுனை உணவகங்களில் அதிரடிச் சோதனை- மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவுகள் அழிப்பு!
கல்முனை பிராந்திய உணவகங்களின் ஊடாக, பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சகல உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்களும் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் திருமதி சரப்டீன் அவர்களின் வழிகாட்டலில் கடந்த திங்கட்கிழமை (20) இரவு முதல் தொடர்ச்சியாக கல்முனை மற்றும் மருதமுனை பிரதேசங்களில் இரவு நேர உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் அதிரடிச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர் தலைமையில், உணவு மற்றும் மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா உள்ளிட்ட பொதுச்சுகாதார பரிசோதகர் குழுவினர் குறித்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இதன்போது, உணவகங்களின் சமையலறைகள், களஞ்சிய அறைகள் மற்றும் உணவு தயாரிக்கப்படும், பரிமாறப்படும் இடங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. அத்துடன் மனித நுகர்வுக்கு ஒவ்வாத மற்றும் சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட பெருமளவிலான உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. இதேவேளை மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட 03 உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், உணவக உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உணவு தயாரிப்பு முறைகள், களஞ்சியப்படுத்தல் மற்றும் தூய்மை பேணுதல் குறித்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.


