விஜய் பற்றி விமர்சித்த திருமாவளவன். இன்னும் ஒரு தேர்தலில் கூட நிற்கல.. அதற்குள் அடுத்த முதலமைச்சர்..
தற்போது, கட்சி துவங்கினாலே, யூகங்கள் எல்லாம் செய்தியாகின்றன.

"அடுத்த முதலமைச்சர் இவர் தான் என்று ஊடகங்களே வரிந்து கட்டிக்கொண்டு வலிந்து செய்தியை பூதாகரப்படுத்துகின்றனர்." என விஜய் குறித்துப் பேசி இருக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன்.
சென்னையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார். அவர் பேசுகையில், "தற்போது, கட்சி துவங்கினாலே, யூகங்கள் எல்லாம் செய்தியாகின்றன. இப்போதே 20 சதவீதம், 24 சதவீதம் என்று எல்லாம் எழுதுகிறார்கள். அடுத்த முதலமைச்சர் இவர் தான் என்று ஊடகங்களே வரிந்து கட்டிக்கொண்டு வலிந்து செய்தியை பூதாகரப்படுத்துகின்றன.
இன்னும் ஒரு தேர்தலில் கூட நிற்கவில்லை. வாக்குகள் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது. ஆனாலும் இந்த சமூகமும் இந்த ஊடகமும் எத்தகைய அணுகுமுறைகளை கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட சமூகத்தில் தான் அங்குலம் அங்குலமாக போராடி... போராடி, போராடி, இன்றைக்கு இந்த அங்கீகாரத்தை நாம் பெற்று இருக்கிறோம். மற்றவர்கள் 100 மீட்டர் ஓடி பரிசு பெறும் இடத்தில், நாம், 10,000 மீட்டர் ஓடி இருக்கிறோம். விடுதலை சிறுத்தைகளை கட்சியாக ஏற்காமல், புறந்தள்ளும் சூழலில் இருக்கிறோம். நம் வாக்கு வங்கி வலிமை பெற வேண்டும். அனைத்து மக்களின் நன்மதிப்பைப் பெற்று, தொடர்ந்து சட்டசபையிலும், லோக்சபாவிலும் இடம்பெற வேண்டும். அப்போதுதான், அதிகாரப்பகிர்வை வென்றெடுக்க முடியும்." எனப் பேசியுள்ளார்.