பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
.

தந்தை பெரியார் குறித்து அவதூறு பரப்பியதாக சீமானை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று (ஜனவரி 9) முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டனர்.
கடலூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளார் சீமான், “பெரியார் கொள்கை வழிகாட்டியா? உனக்கு உடல் இச்சை வந்தால், பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ, அவர்களுடன் உறவை வைத்துக்கொண்டு சந்தோஷமாக இரு என்று பெரியார் சொன்னது பெண்ணிய உரிமையா?” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இராமகிருஷ்ணன் கண்டனம்!
இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் இராமகிருஷ்ணன் வீடியோ வெளியிட்டு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
மேலும், ”பெரியார் அப்படி சொன்னார் என்பதற்கான ஆதாரத்தை காட்டவில்லை என்றால், நாளை காலை 10 மணிக்கு நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு நான் செல்ல இருக்கின்றேன். பெரியார் சொன்னதற்கான ஆதாரத்தை சீமான் என்னிடம் காட்ட வேண்டும். அப்படி அவர் காட்டவில்லை என்றால் மக்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
தபெதிகவினர் போராட்டம் – கைது!
அதன்படி சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டை முற்றுகையிட ராமகிருஷ்ணன் தலைமையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று காலை முயன்றனர். ஆனால் 200 அடிக்கு முன்னதாகவே அவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் தொடர்ந்து சீமானுக்கு எதிராக முழக்கமிட்டு அங்கு போராட்டம் நடத்திய தபெதிகவினர் கைது செய்யப்பட்டனர்.
இதே போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சீமானுக்கு எதிராக தபெதிகவினர் போராட்டம் நடத்தி வருகிறனர்.