எதிர்த்துப் போராடினாலே வாழ்வு என களமுனைக்கு வந்த சிவம் அண்ணர்!
'ஒரு செய்தி நூறு வீதம் உண்மையானது என நீங்கள் நம்பும் வரையில் அதனை ஊடகங்களுக்குச் செய்தியாகவோ கிசுகிசுப்பாகவோ தேவையற்ற சந்தேகங்களை உருவாக்கும் வகையிலோ வெளியிடக் கூடாது

எதிர்த்துப் போராடினாலே வாழ்வு என களமுனைக்கு வந்த சிவம் அண்ணர்!
'ஒரு செய்தி நூறு வீதம் உண்மையானது என நீங்கள் நம்பும் வரையில் அதனை ஊடகங்களுக்குச் செய்தியாகவோ கிசுகிசுப்பாகவோ
தேவையற்ற சந்தேகங்களை உருவாக்கும் வகையிலோ வெளியிடக் கூடாது
'இது தமிழ் ஊடகத்துறையில் ஜாம்பவானாகத் திகழ்ந்த எனது வழிகாட்டி கோபு ஐயா(எஸ். எம் கோபாலரெத்தினம்) எனக்கு கற்பித்த பால பாடம்.
இதனைச் சொன்னால் பரபரப்புச் செய்தி அரசியல்தான் வடக்கில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரையே உருவாக்கி விட்டது. இதனையே நாமும் செய்வதில் என்ன
தவறு? என இன்றைய Youtube காரர்கள் கேட்கக்கூடும். இன்று வரை சிங்களவர்களுக்கு நிகராக இல்லாவிட்டாலும் வட கிழக்கில் தமிழர்கள் தமது உழைப்புக்குகேற்றவகையில்
பெறும் கூலி, காணி உரிமை, பாதுகாப்பு போன்ற விடயங்களில் இருந்து எட்டிய தூரத்திலேயே
மலையகத் தமிழர்கள் இருக்கின்றார்கள். இவற்றைக் கருத்திற் கொண்டு சிவம் அண்ணரின்
போராட்டப் பங்களிப்புக் குறித்து அவரது இறுதிச் சடங்கு முடியும் வரை அமைதி
காப்பதே எமது கடமை என முடிவெடுத்தேன்.
பொதுவாக 1990 க்குப் பின் பங்களித்தவர்கள் தங்களது ஊகங்கள், சந்தேகங்களை உண்மையானவை என நிறுவ முயன்று வரலாற்றைத் திசைதிருப்ப முயல்கிறார்கள்.
அவர்களாவது பங்களித்தவர்கள் என்ற வகையில் விடலாமென்றால் போராடத் துணிச்சல் அற்று களத்திலிறங்கத் தயாரில்லாமல் தேவலோக வாழ்க்கை தேடித் திரிந்தவர்களும் சிவமண்ணரின்
வரலாற்றில் குழப்பத்தை உருவாக்க முயல்கின்றார்கள்.
அதனால்தான் 78 ல் இயக்கத்தில் இணைந்து (76 அல்ல ) பின்னர் விலகிய பின் தனிப்பட்ட தகராறில் வெட்டிக் கொல்லப்பட்ட (சாவகச்சேரி பகுதியில் ) சிவம் என்பவரின் வரலாற்றுப்
பெட்டியை சிவம் அண்ணர் என்ற போராட்ட இயந்திரத்தில் கொழுவ முனைகிறார்கள். அதே போல சிவத்தான் என்ற பெயரில் மட்டக்களப்பு அணியிலிருந்து வடக்கில் கணிசமான பங்களிப்பை செய்த பின்
கருணா அம்மானுடன் போனவரின் வரலாற்றை இதே இயந்திரத்தில் கொழுவ முனைகிறார்கள் 1990 பின் பங்களித்தவர்கள்.
தமிழரின் ஆயுதப் போராட்ட வரலாற்றில் தங்களது பங்களிப்பை செய்ய முனைந்தவர்களை அவதானித்தால் அவர்கள் பொதுவாக 17 வயது முடிந்த பின் போராட வேண்டுமென முடிவெடுத்
திருப்பார்கள். தாம் எதிர்பார்த்த வகையில் எல்லாம் நடக்கவில்லை என்பதாலோ, வேறு பல்வேறு காரணங்களாலோ 33- 34 வயதில் போராட்டத்திலிருந்து விலகி விடுவார்கள். பின்னர் அவர்கள்
சொந்த வாழ்க்கையில் கூடிய கவனமெடுப்பர். எங்கள் சிவமண்ணாவோ அந்த 34 வயதில் போராளியானவர். 1983 ல் இந்தியா வழங்கிய இரண்டாவது முகாமில் பயிற்சி பெற்றவர்.
1977 ஆம் ஆண்டு இனக்கலவரத்தைத் தொடர்ந்து தமிழர் தாயகமே தமிழர்களுக்குப் பாதுகாப்பு என எண்ணி மலையகம் - பசறையிலிருந்து வடகிழக்குக்கு இடம் பெயர்ந்தோர்களில் இவரும் ஒருவர்.
இவர் குடியேறிய இடம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான புல்லுமலை. எப்போதுமே நாம் ஓடிக்கொண்டிருக்கமால் எதிர்த்து நின்று போராட வேண்டும் என்ற தீர்மானத்தை செயற்படுத்த
அவர் தேர்ந்தெடுத்த இயக்கம் தான் தமிழீழ விடுதலைப்புலிகள். சிறையிலிருந்து தப்பிப்பது என்பது வேறு. சிறையை உடைத்து அங்கிருந்து கைதியை விடுவிப்பது என்பது வேறு .
வெலிக்கடைப் படுகொலையைத் தொடர்ந்து மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிர்மலாவை மீட்டெடுத்ததையே சிறையுடைப்பு என்று சொல்லலாம்.
1. துவிச்சக்கர வண்டியில் சென்று மேற்கொள்ளப்பட்ட சிறையுடைப்பு என்ற நடவடிக்கை என்று உலகில் வேறெதனையையும் சுட்டிகாட்ட இயலாது .
2. இரண்டே இரண்டு கைத்துப்பாக்கிகளுடன் சென்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது .
3. மீட்கப்பட்டவரை துவிச்சக்கர வண்டியிலேயே கொண்டு சென்றமை என்ற வரலாறு இந்த நடவடிக்கைக்கு உண்டு.மட்டக்களப்பு சிறைக்குள் சென்ற நாலு போராளிகளில் ஒருவரான சிவமண்ணார் தனது பலத்தை
திரட்டி காலாலேயே உதைத்து இக் கதவை உடைத்து நிர்மலா வெளியில் வர உதவினார். நிர்மலா எந்த அறையில் இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த போது தன்னை
அடையாளம் காட்டும் வகையிலான நடவடிக்கையை நிர்மலா மேற்கொண்டார். இந் நடவடிக்கைக்காகத் திட்டமிடும்போது சிறைக்காவலருக்கான சீருடை அணிவதற்குப் பொருத்தமான உடற்கட்டுடைய வராகவும்,
சிங்களம் தெரிந்தவராகவும் இருந்ததனால் இவரையே முதன்மையானவராக கொண்டு திட்டமிடப்பட்டது.
சிறைக் கதவைத் திறக்க முன்னர் அதிலுள்ள சிறு ஒட்டைவழியாக உள்ளிருந்து வெளியே பார்ப்பார்கள்.
அவ்வேளை வேறு சிறையிலிருந்து கைதிகளைக் கொண்டு வருபவர் போல ஒருவர் தோற்றமளிக்க வேண்டும். தனக்கான பணியை இவர் மிடுக்குடன் மேற்கொண்டார்.
கதவு திறக்கும் வேளையில்தான் நிலைமையின் விபரீதத்தை புரிந்துகொண்டு கதவை மூட முயன்றனர் சிறைக்காவலர்கள். எனினும் அந்த போராட்டத்திலும்
சிவமண்ணன் தனது பங்கை காத்திரமாக வெளிப்படுத்தினார். இவ் வேளையில் தான் சிறையிலிருக்கும் நிர்மலாவை மீட்கத்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதை உணர்ந்த கடமையிலிருந்த பொறுப்பதிகாரி
நிர்மலாவின் அறைக்கதவின் திறப்பை எடுத்துக்கொண்டு ஓடி ஒளிந்து கொண்டார்.
சிவமண்ணர் உட்பட உள்ளே சென்ற நால்வரும் உடனடியாக செயலில் இறங்கினர். பொலிஸாருக்கு தொலை பேசி மூலம் அறிவிக்க எடுத்த முயற்சி முடியடிக்கப்பட்டது.
தொடர்ந்து சிவமண்ணரின் உதையின் வேகம், பலம் என்பன வெளிப்பட காரியம் கை கூடியது. தொடர்ந்து பின்னாளில் நடைபெற்ற களுவாஞ்சிக்குடி மற்றும்
ஏறாவூர் பொலிஸ் நிலையத் தாக்குதல்களிலும் தனது காத்திரமான பங்களிப்பை வெளிப்படுத்தினார் சிவம் அண்ணர்.
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டப் போராளிகள் இவர் மீது மிகவும் மதிப்பு வைத்திருந்தனர். தன்னை விட மிகக் குறைந்த வயதினையும் அனுபவத்தையும் உடைய போராளிகளையும் மதித்தே நடந்து கொண்டார்.
பல்வேறு துறை நடவடிக்கைகளிலும் இவர் பங்களித்தார். வாழ்வில் எல்லோருக்கும் ஏற்றம் இறக்கம் உண்டுதானே. எக்காலத்திலும் திமிராகவோ, துவண்டுபோகாமலோ பணியாற்றியவர் என்றால் இவரையே உதாரணம் காட்டலாம் .
பிற்காலத்தில் கோப்பாவெளி கிராமத்தில் வாழ்ந்த போது கிராம அபிவிருத்திச் சங்கம், ஆலய நிர்வாகம் போன்றவற்றில் தலைவராக விளங்கினார் என்றால் இவரது கடந்த கால வரலாறு பற்றி
மக்கள் இவர் மீது கொண்ட பெரும் மதிப்புதான் காரணமாகும். தனது போராட்ட வரலாறு பற்றி இவர் வெளியில் சொல்லிக்கொள்வதில்லை. ஆனால் அவரின்
பங்களிப்பு பல்வேறு துறைகளிலும் இருந்தது. என்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டுமல்லவா? பெறுமதியான எடுத்துக் காட்டான வாழ்வ ல்லவா அவருடைய வரலாறு.
- பசீர் காக்கா