தமிழ்நாடு முழுவதும் அரைக்கம்பத்தில் பாஜக கொடி - நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!
பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் மறைவையொட்டி தமிழ்நாடு பாஜக சார்பில், 5 நாட்கள் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்துஆளுநருமான இல.கணேசன் மறைவையொட்டி, தமிழ்நாடு முழுவதும் பாஜக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
நாகாலாந்து ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான இல.கணேசன், உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 15) மாலை காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து, அவரது உடல் மருத்துவமனையிலிருந்து தி.நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இல. கணேசன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது, “காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட எமர்ஜென்சி காலக்கட்டத்தில், மக்களுக்கு தேவையான பணிகளை செய்தவர் இல.கணேசன். மறைந்த முதலமைச்சர்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் அன்பையும் பெற்றவர்.
ராஜ்யசபா உறுப்பினராக இருந்தவர். தொடர்ந்து, மேற்கு வங்க ஆளுநராகவும், நாகலாந்து ஆளுநராகவும் பணியாற்றியவர். மாபெரும் தலைவரை நாம் இழந்துள்ளோம். அவரது இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, பாஜகவுக்கும் பேரிழப்பு. பாஜக மாநிலத் தலைவராக இருந்த காலத்தில், சைக்கிளில் ஊர் ஊராக பயணம் மேற்கொண்டு கட்சியை வளர்த்தவர். மேலும், தேசிய செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
திருநெல்வேலியில் வருகிற 17ஆம் தேதி பாஜக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற இருந்தது. அவரது மறைவையொட்டி அக்கூட்டம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து அடுத்த 5 நட்களுக்கு அனைத்து பாஜக நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் பாஜக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். அவரது இறப்பு நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பாகும்” என நயினார் நாகேந்திரன் கூறினார்.
இதனிடையே, இல. கணேசன் உடல் இன்று (ஆகஸ்ட் 16) மாலை 5 மணிக்கு தகனம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.