Breaking News
பிரான்சில் 'பிராங்கோ தமிழ் அடையாளம்': அவசியமும், ஆழமும்!
பிரான்சுக்கு வந்த முதல் தலைமுறையினர் பல தசாப்தங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தின் பனைமரக் காடுகளின் குளிர்ந்த நிழலில் வாழ்ந்தவர்கள்.

ஈபிள் கோபுரத்தின் கம்பீர நிழலில், பாரீஸின் புராதன வீதிகளில் ஒலிக்கும் தமிழ் மழலையின் குரலைக் கேட்டதுண்டா? செயின் நதிக்கரையின் இதமான காற்றில், தமிழோசையின் ஒலிநயமும் கலந்திருப்பதை உணர்ந்ததுண்டா? அதுதான் 'பிராங்கோ தமிழ்' அடையாளம். அது வெறும் வார்த்தையல்ல; அது ஒரு தலைமுறையின் சுவாசம், ஒரு கலாச்சாரத்தின் பயணம், பிரெஞ்சு மண்ணில் வேரூன்றி, தமிழ் விண்ணை நோக்கி வளரும் ஒரு ஆலமரத்தின் கதை.
இந்த 'பிராங்கோ தமிழ் அடையாளம்' கட்டமைக்கப்பட வேண்டியது அவசியமா? என்று கேட்டால், ஆயிரம் முறை 'ஆம்' என்று நான் சொல்வேன். அதன் தேவை என்ன? அதன் தேவை, ஒரு விதையை மரமாக்குவதற்கும், ஒரு நதியைக் கடலில் சேர்ப்பதற்கும் சமமானது.
பிரான்சுக்கு வந்த முதல் தலைமுறையினர் பல தசாப்தங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தின் பனைமரக் காடுகளின் குளிர்ந்த நிழலில் வாழ்ந்தவர்கள் . வன்னியின் வளம்மிக்க வயல்களில் வியர்வை சிந்தி, விளைச்சலைக் கண்டு மகிழ்ந்தவர்கள். மட்டக்களப்பின் வாவியோரம் மீன் பிடித்து, நிலவொளியில் கதை பேசிச் சிரித்தவர்கள். அமைதி தவழ்ந்த அந்தக் கிராமங்களின் மீது, திடீரெனப் பெய்த குண்டுமழையில் அவர்களின் கனவுகள் சிதறின. கண் முன்னே உறவுகளின் உயிரற்ற உடல்களைப் பார்த்து, கண்ணீரின் உப்புக்கரிப்புடன் கடலேறியவர்கள் அவர்கள். ஈழத்தின் போர்க்கள வடுக்களைத் தங்கள் ஆன்மாவில் சுமந்து, சிதைந்து போன நினைவுகளின் மிச்சங்களை மட்டும் நெஞ்சுக்குள் பத்திரப்படுத்தி, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு புகலிடம் தேடிவந்தவர்கள்
இன்னும் ஒரு பகுதியினர் , புதுச்சேரியின் வரலாற்று வீதிகளிலிருந்து வந்தார்கள். பிரெஞ்சு மொழியைத் தங்கள் தமிழோடு இயல்பாகக் கலந்து பேசியவர்கள். தங்கள் மூதாதையர்கள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்ததின் அடையாளமாக, தங்களின் பெயர்களிலும், பழக்கவழக்கங்களிலும் இரு கலாச்சாரத்தின் சங்கமத்தைக் கொண்டிருந்தவர்கள். அவர்களுக்குப் பிரான்ஸ் ஒரு அன்னிய தேசமல்ல; அது அவர்களின் வரலாற்றின் ஒரு நீட்சி.
இப்படி தமிழர்கள் ஒவ்வொருவரும் பிரான்சுக்கு வெவ்வேறு திசையிலிருந்து வந்தாலும், அவர்கள் தங்கள் பெட்டிகளில் உடைகளை மட்டும் கொண்டு வரவில்லை.
அவர்கள், குண்டுகளால் துளைக்கப்பட்ட தழிழீத்தின் வீட்டு முற்றத்தின் நினைவுகளைச் சுமந்து வந்தார்கள். புதுச்சேரியின் பிரெஞ்சுக் கட்டிடங்களின் மீது படிந்திருந்த காலத்தின் கதைகளைக் கொண்டு வந்தார்கள். ஆம், தங்களின் மொழியை, பண்பாட்டை, சிதறு தேங்காய் உடையும் கோவில் திருவிழாக்களை, நாக்கிலே நீரூறும் ஆட்டுக்கறி குழம்பையும், அவித்த புட்டையும், உறவுகளின் பிரிக்க முடியாத மேன்மையையும் என, ஒரு சிதைக்கப்பட்ட, ஆனால் சாகாவரம் பெற்ற முழு நாகரிகத்தையே சுமந்து வந்தார்கள்.
ஆனால், அவர்களின் பிள்ளைகள், இங்குப் பிறந்த இரண்டாம், மூன்றாம் தலைமுறையினர், ஒரு வித்தியாசமான உலகில் கண் திறந்தார்கள். அவர்கள் பிரெஞ்சுப் பள்ளிகளில் விக்டர் ஹியூகோவைப் படித்தார்கள்; அதே சமயம், வீட்டு மாடத்தில் பாரதியாரைப் பாடினார்கள். அவர்கள் 'சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்(Liberté-Égalité-Fraternité )என்று முழங்கினார்கள்; அதே நேரம், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளை நெஞ்சில் ஏந்தினார்கள்.
இந்த இருவேறு உலகங்களுக்கு இடையில், அவர்கள் தங்களை யார் என்று அடையாளப்படுத்திக் கொள்வது? பிரெஞ்சு நண்பர்களுடன் இருக்கும்போது முழுமையான பிரெஞ்சுக்காரர்களாகவும், தமிழ் குடும்ப விழாக்களில் முழுமையான தமிழர்களாகவும் இருக்க முயன்றனர். இந்த இரட்டை வாழ்க்கை, சில சமயங்களில் மன அழுத்தத்தையும், "நான் யார்?" என்ற ஆழ்ந்த தேடலையும் உருவாக்கியது. இந்தத் தேடலுக்கு விடைதான் 'பிராங்கோ தமிழ் அடையாளம்'. "நீ இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை; நீ இரண்டுமேதான்" என்று அந்த இளைய தலைமுறையின் தோளில் தட்டிக் கொடுக்கும் ஒரு பேராறுதல் அது.
எதற்காக இந்த அடையாளம் கட்டமைக்கப்பட வேண்டும்?
'பிராங்கோ தமிழ்' என்ற அடையாளம், அவர்களின் தனித்துவமான அனுபவத்திற்கு ஒரு பெயரையும், வடிவத்தையும் கொடுக்கிறது. அது அவர்களின் பன்முகத்தன்மையை ஒரு பலவீனமாக அல்ல, மாறாக ஒரு பெரும் பலமாக அங்கீகரிக்கிறது. பிரெஞ்சு மொழியை அதன் நுணுக்கங்களுடன் பேசும் அதே வேளையில், திருக்குறளின் ஈரடிகளை அதன் ஆன்மா சிதையாமல் உச்சரிக்கும் திறனே அவர்களின் பலம்.
அடையாளம் என்பது பழையதை அப்படியே பாதுகாப்பது மட்டுமல்ல; புதிய சூழலுக்கு ஏற்ப அதை வளர்த்தெடுப்பதும் ஆகும். பிராங்கோ தமிழ் அடையாளம், தமிழ் மொழியையும், கலைகளையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்த உதவுகிறது. சனிக்கிழமை தோறும் நடைபெறும் தமிழ்ப் பள்ளிகள் இந்த அடையாளத்தின் ஆணிவேர்கள். அதே சமயம், பிரெஞ்சுச் சிந்தனைகளின் தாக்கத்தால், நமது பாரம்பரியக் கதைகளுக்குப் புதிய பார்வைகளும், புதிய கலை வடிவங்களும் பிறக்கும். பரதநாட்டியமும் பாலேவும் சங்கமிக்கும் ஒரு புதிய நடனம் இங்கே உருவாகலாம். கர்நாடக சங்கீதமும் ஜாஸ் இசையும் இணையும் ஒரு புதிய மெட்டு இங்கே பிறக்கலாம். இதுவே கலாச்சாரத்தின் ஆரோக்கியமான பரிணாமம்.
பிராங்கோ தமிழ் சமூகம், பிரான்சின் பன்முகத்தன்மைக்கு ஒரு புதிய வண்ணத்தைச் சேர்க்கிறது. நமது கடின உழைப்பு, குடும்பப் பற்று, தொழில் முனைவு போன்றவை பிரெஞ்சுப் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கின்றன. நமது உணவு விடுதிகள், பிரெஞ்சு நாக்குகளுக்குப் புதிய சுவைகளை அறிமுகப்படுத்துகின்றன. லாச்சப்பல் போன்ற பகுதிகள், பாரீஸின் கலாச்சார வரைபடத்தில் தவிர்க்க முடியாத இடங்களாக மாறிவிட்டன. ஒரு பிராங்கோ தமிழ் மருத்துவர், தன் நோயாளியிடம் பிரெஞ்சு மொழியில் பரிவுடன் பேசும்போது, அவரின் இதயத்தில் பிரெஞ்சு மரபின் வாழ்வியல் சிந்தனையும் தமிழ் மரபின் கருணையும் கலந்திருக்கிறது. இதுவே நாம் பிரான்சுக்குச் செய்யும் மிகப்பெரிய பங்களிப்பு.
'பிராங்கோ தமிழ் அடையாளம்' என்பதை உருவாக்குவது, பிரெஞ்சு சமூகத்திலிருந்து நம்மைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான முயற்சி அல்ல. மாறாக, நமது தனித்துவமான அடையாளத்துடன், பிரெஞ்சு சமூகத்தில் முழுமையாக ஒருங்கிணைவதற்கான ஒரு வழி. அது ஒரு கோட்டை கட்டுவதல்ல; அது ஒரு பாலம் கட்டுவது.
எப்படியொரு மரத்தின் வேர்கள் பூமிக்குள்ளும், அதன் கிளைகள் ஆகாயத்தை நோக்கியும் வளர்கிறதோ, அதுபோல, பிராங்கோ தமிழர்களின் வேர்கள் தமிழ் மரபிலும், கிளைகள் பிரெஞ்சு தேசத்திலும் பரந்து விரிந்து வளர வேண்டும். நம் பிள்ளைகள், ஒரு கையில் (Baguette) பாணையும், மறுகையில் வடையையும் ஏந்தி, "Je suis Franco-Tamoul" (நான் ஒரு பிராங்கோ தமிழன்/தமிழச்சி) என்று பெருமையுடன் சொல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை. அந்தப் பெருமிதமே இந்த அடையாளத்தின் அடித்தளம்; அந்தச் சங்கமமே அதன் ஆன்மா. இது காலத்தின் கட்டாயம்; இதுவே நம் எதிர்காலத்தின் அடையாளம்.