இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகளை அன்புடன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்; தேவையான வசதிகள் வழங்கப்படும்
ஐநா அகதிகள் முகாமால் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு வருவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் கவலை!

இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் இலங்கை அகதிகளை அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கி அன்பாக அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இதேவேளை அகதிகள் நாடு திரும்பிய போது சட்ட குறைபாடுகளால் நடந்த இரண்டு சம்பவங்களை அடிப்படையாக் கொண்டு ஐநா அகதிகள் முகாமால் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு வருவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் கவலையடைவதாகவும் , இந்த விடயம் தொடர்பில் அந்த அமைப்புடன் கலந்துரையாடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்தத்தால் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக சென்ற ராமசாமி தேவராஜா, தேவராஜா புஸ்பராணி என்ற இருவரும் இலங்கை திரும்பிய போது கைது செய்யப்பட்டமை தொடர்பில் இந்த விவாதத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இவர்கள் இலங்கையில் யுத்தம் நிலவிய காலப்பகுதியிலேயே இந்தியாவுக்கு அகதிகளாக அகதி முகாமுக்கு சென்றுள்ளனர். யுத்த சூழலின் போது எவரும் சட்டரீதியாக அகதிகளாக செல்வதில்லை. உலக நாடுகளிலும் அவ்வாறான தன்மையே காணப்படும்.தமது உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் எவ்வழியிலாவது நாட்டை விட்டுச் செல்வார்கள்.
இதன்படி தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் 110க்கும் அதிகளவில் காணப்படும் அகதி முகாம்கள் தொடர்பில் எமது நாட்டில் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக உள்ளன. இந்த அகதி முகாம்களில் ஒரு இலட்சத்து 10ஆயிரம் பேர் இருப்பதாக கூறப்படுகின்றது. அவர்களில் 28ஆயிரத்து 500 பேர் வரையிலானோர் இலங்கையினதோ இந்தியாவினதோ குடியுரிமை இல்லாதவர்களாகவே இருந்துள்ளனர்.
இதனால் ஜே.வி.பி என்ற வகையில் நானும் இராமலிங்கம் சந்திரசேகரனும் அந்த முகாம்களுக்கு சென்று காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் இ ரட்ண சிறி விக்கிரமநாயக்கவின் உதவியுடன் பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை கொண்டுவந்து அதனை நிறைவேற்றி குறித்த 28ஆயிரத்து 500 பேருக்கும் இலங்கை குரியுரிமையை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தோம்.
இந்நிலையில் இப்போது யுத்தம் முடிவடைந்த பின்னர் குறித்த அகதி முகாம்களில் இருந்தவர்களில் குறைந்தது 6ஆயிரம் பேர் வரையிலானோர் இலங்கை வந்து குடியேறியுள்ளனர். கிளிநொச்சியில் கனகபுரம், பாரதிபுரம் போன்ற இடங்களில் இவ்வாறு குடியேறியவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் காணி மற்றும் மின்சாரங்களை வழங்குவதற்கு நடவடிக்கையெடுத்துள்ளேன்.
இவ்வாறான நிலைமையில் இந்தியாவில் இருந்து இலங்கை வரும் அகதிகள் கைது செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. அண்மையில் சின்னையா சிவலோகநாதன் என்பவர் பலாலி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தோல்வியடைந்த எம்.பியொருவர் பெரும் கோசமெழுப்பி நீதிமன்றத்திற்கும் சென்றார். ஆனால் அதன்பின்னர் நானும், குடிவரவு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஆனந்த விஜேபாலவும் இது தொடர்பில் அவதானம் செலுத்தி 2 நாட்களில் அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைது செய்யப்படுவது சரியானது அல்ல. இது அரசாங்கத்தின் கொள்கையும் அல்ல. நாங்கள் அதிகாரிகள் ஊடாகவே நாட்டை நிர்வாகம் செய்கின்றோம். இதனால் அதிகாரிகள் தவறிழைக்கலாம். இதனை அரசாங்கத்தின் செயற்பாடு என்று அரசாங்கதிற்கு சேறு பூச கூடாது. தமிழ் அகதிகளுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வேண்டுமென்றே இடையூறுகளை ஏற்படுத்துகின்றது என்று காட்டுவதற்கே முயற்சிக்கின்றனர். வடக்கில் உள்ள சிலர் இவ்வாறு செய்கின்றனர்.
பச்சை இனவாதத்தை தமது செயற்பாடாக கொண்டவர்களே அவர்கள். வடக்கில் ராஜபக்ஷக்களின் பிம்பங்கள் உள்ளன. அவர்களுக்கு இந்த அரசாங்கம் தமிழ் மக்களை தமிழ் என்பதனால் பழிவாங்குகின்றது என்று காட்டவே முயற்சிக்கின்றனர்.
இதேவேளை ஆகஸ்ட் 6ஆம் திகதி இன்னுமொரு சம்பவம் நடந்தது. அதாவது ராமசாமி தேவராஜா, தேவராஜா புஸ்பராணி என்ற இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இலங்கை அகதிகளே. இலங்கையில் குடிவரவு, குடியகல்வு சட்டம் உள்ளது. அதன்படியே இவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் . இந்த விடயத்தில் நாங்கள் கவலையடைகின்றோம். இவ்வாறு வருபவர்களில் ஒருவர், இருவருக்காவது இவ்வாறு நடக்கலாம். இதற்கான சட்ட ரீதியான காரணங்கள் உள்ளன. ஆனால் இது மாற்ற முடியாத விடயம் அல்ல. இந்த திருத்தங்களை முன்னரே செய்திருக்கலாம்.
அரசாங்கம் என்ற வகையில் இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளை அன்பாக ஏற்றுக்கொள்கின்றோம். நாங்கள் அவர்களுக்கு வழங்கக்கூடிய முடிந்தளவான உதவிகளை வழங்குவோம். அமைச்சர் ஆனந்த விஜேபால புனர்வாழ்வு அதிகாரசபையின் முன்னாள் தலைவராவார். இவர் 5 வருடங்களில் விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் புலிகள் அல்லாதவர்கள் இருந்த முல்லைத்தீவு, கிளிநொச்சியில் உள்ள சகல வீடுகளுக்கும் சென்றவரே. 2015ஆம் ஆண்டின் பின்னர் வீடுகளுக்கு சென்று படிவங்களை விநியோகித்தவர்களே. இதனால் எந்த வகையிலும் கொள்கை ரீதியில் இவ்வாறு வரும் அகதிகளை தடுத்து வைத்தல் மற்றும் கைது செய்யப் போவதில்லை.
இந்நிலையில் ஐநா அகதிகள் முகாமால் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு வருவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம். குறிப்பிட்ட இரண்டு சம்பங்களை பயன்படுத்தி ஏன் இவ்வாறு இலங்கைக்கு அவர்கள் வருவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.
இதனால் சம்பந்தப்பட்ட அமைச்சு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்.
எவ்வாறாயினும் இங்கிருந்து அகதிகளாகியுள்ள எமது மக்களுக்கு வழங்கக்கூடிய முடிந்தளவான வசதிகளை வழங்கி அவர்களை பாதுகாத்து இந்நாட்டின் பிரஜைகளாக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். இந்த விடயத்தில் சட்ட விடயத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அது தொடர்பில் ஆராய்ந்து அவ்வாறான கைதுகளை நிறுத்த நடவடிக்கை எடுப்போம். இதனால் வேறு அதிகாரிகளால் இழைக்கப்படும் தவறுகளை இனவாத அர்த்தத்தில் பார்க்க வேண்டாம். இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன. அவர்களுக்கு பிணையும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் என்பதனால் அநீதிக்கு இலக்காவதாக கூறப்படும் செய்தி முதமைச்சர் கனவில் இருப்பவர்களுக்கு அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கமைய பெறுமதியானதாக இருக்கலாம். ஆனால் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளவர்களுக்கு அவ்வாறான எண்ணம் இருக்காது என்று நினைக்கின்றோம். நாங்கள் ஒரே இலங்கையை அமைப்போம். குறைபாடுகளை எங்களுக்கு சுட்க்காட்டுங்கள். ஆனால் இனவாத திட்டங்களுக்கு உதவ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.