பிரான்ஸ் தமிழர்களின் ஒன்றுகூடலான தமிழர் விளையாட்டு விழா உற்சாகமாகவும், வெகு சிறப்பாகவும் இடம்பெற்றது.
தூறல்களாய் மழை முகம் காட்டுவதையும் மீறி பிரெஞ்சு தேசியக் கொடி மற்றும் தமிழீழத் தேசியக் கொடி பட்டொளிவீசின!

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் – பிரான்ஸ், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் – பிரான்ஸ் இணைந்து நடாத்திய 26வது தமிழர் விளையாட்டு விழா 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை L’Aire des Vents Dugny திடலில் சிறப்பாக இடம்பெற்றது.
தூறல்களாய் மழை முகம் காட்டுவதையும் மீறி பிரெஞ்சு தேசியக் கொடி மற்றும் தமிழீழத் தேசியக் கொடி பட்டொளிவீச பிரான்ஸ் தமிழர்களின் ஒன்றுகூடலான தமிழர் விளையாட்டு விழா உற்சாகமாகவும், வெகு சிறப்பாகவும் இடம்பெற்றது. கால நிலை எமக்கு சாதகமாக இல்லாத போதிலும், மழையையும் பொருட்படுத்தாது, இவ்விளையாட்டு விழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கூடி மகிழ்ந்துள்ளனர். ஆடல், பாடல், இசை, விளையாட்டு என பல்வேறு மகிழ்வூட்டல் நிகழ்வுகள் திடலை அலங்கரித்திருந்ததோடு, பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், வியாபார விளம்பர காட்சியகங்கள் மற்றும் சிறு கடைகள் நிறுவப்பட்டிருந்தன.
இந்நிகழ்வின் பிரதான பொதுச்சுடரினை சமூக செயற்பாட்டாளரான திரு. ஜெயக்குமார் அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழத் தேசியக் கொடியினை மாவீரர் விக்டர் அவர்களின் சகோதரரான திரு. ரொனி மருசலீன்அவர்கள் ஏற்றிவைத்தார். முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் சுடரினை தமிழர் விளையாட்டுத் துறை உறுப்பினரும், தமிழர் விளையாட்டு விழாவிற்கான விளையாட்டு ஏற்பாட்டு குழு உறுப்பினர்களில் ஒருவருமான திரு. ராஜலிங்கம் அவர்கள் ஏற்றி வைத்திருந்தார்.
இசைப்பிரியா பாண்ட் வாத்திய இசையும், இன்னிய அணியின் வாத்திய இசையும் தொடக்க நிகழ்வுக்கு அழகூட்டியிருந்தது. 95 பிராந்திய மாகாண அவை உறுப்பினர் திரு. செதிறிக் (M. Cederic) பிரென்சு தேசியக் கொடியினை ஏற்றி வைக்க, ஐரோப்பிய ஒன்றியக் கொடியினை டிரான்சி நகரசபை உறுப்பினரும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் பிரான்ஸ் நாட்டின் தலைவருமாகிய திரு. அலன் ஆனந்தன் அவர்கள் ஏற்றி வைத்தார். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கொடியை உப செயலாளர் திருமதி. கபிலன் தாரணி அவர்கள் ஏற்றி வைத்திருந்தார்.
மங்கள விளக்கினை பங்களாதேஸ் தளபாடங்கள் நிறுவன உரிமையாளர் திரு. சலீம் ரெசா அவர்களும் அந்நிறுவனத்தின் தமிழர்களுக்கான பிரதிநிதியான திருமதி. தியா மோகன் அவர்களும் எற்றி வைத்தனர். இன்னிய நடனக்கலைஞர்கள், இசைப்பிரியா பேண்ட் வாத்தியக்கலைஞர்கள் மற்றும் பயிற்றுவித்த நெறியாளர்கள் அனைவரும் மதிப்பளிக்கப்பட்டனர். தொடர்ந்து நிகழ்வுகள் இனிதே ஆரம்பமாகின.
சிறப்பு விருந்தினர்கள், தமிழர் புனர்வாழ்வுக் கழக செயற்பாட்டாளர்கள், தாயக செயற்பாட்டாளர்கள், துறைசார் விளையாட்டு செயற்பாட்டாளர்கள், தமிழ்ச் சங்கப் பிரதிநிதிகள், வர்த்தக உரிமையாளர்கள் மற்றும் பல பிரமுகர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை வழங்கி உற்சாகப்படுத்தினர்.
கால நிலையினைக் கருத்தில் கொண்டு, திடலில் கூடாரம் அமைத்த வர்த்தகர்கள் மற்றும் பொது நிறுவனங்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற பொதுநோக்குடன், அனைவரும் பங்குபற்றும் வகையில் திடல் வாசல் கட்டணமற்ற வாசலாக திறந்துவிடப்பட்டது.
கல்யாணி உணவகம் மற்றும் சோழன் உணவகம் நிறுவப்பட்டு, சோழன் பல்பொருள் அங்காடி தனது நான்காம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதிர்ஷ்டலாப சீட்டு விநியோகித்திருந்தது.
நல்வாய்ப்பு சிட்டுக் குலுக்களில் புதிய மகிழுந்திற்கு 1590 என்ற இலக்கம் தெரிவானது. மேலும் 100 ஆறுதல் பரிசில்களுக்கான இலக்கங்கள் தெரிவு செய்யப்பட்டன. பரிசில்களைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் அந்நிறுவனத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
சிறப்பு நிகழ்வுகளாக தாயகக் கலைஞர்களுடன் இணைந்து
புதுச்சேரியில் இருந்து வருகை தந்த தமிழிசைப் பாடகரும் பின்னணிப் பாடகருமான சித்தன் ஜெயமூர்த்தி அவர்களின் இசைக்கச்சேரியும், சிறுவர் முதல் பெரியோர் வரைக்கான புதிய அறிமுக விளையாட்டுக்களும், இளைஞர்களைக் கவரும் விதமாக சொல்லிசைக் கச்சேரியம் (Rap), மேற்கத்தேய நடனம் என பல கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. 100 கிலோ எடையை எவ்வித உதவியும் இன்றி பற்களால் தூக்கும் சாகச நிகழ்வும், புதுச்சேரியைச் சேர்ந்த திரு. இலக்கியநாதன் என்பவரால் நிகழ்த்தப்பட்டது
இத்திடலை வழங்கிய சென் சென்தெனிஸ் மாகாண அவை, La Courneuve, Dugny, Le Bourget நகரமன்றங்களிற்கும், பிறஉதவிகளை வழங்கிய நகர பிதாக்களுக்கும் மற்றும் காவற்துறை அதிகாரிகளுக்கும் எமது மனம் நிறைந்த நன்றிகைளத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பொதுத்தொண்டை மகிழ்வெனக் கொண்டு தன்னலம் கருதாது பணியாற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள், தொண்டர்கள், தமிழ் தேசிய அமைப்புகள், தமிழ் சங்கங்கள், கல்வி நிறுவனங்கள், கலைஞர்கள், ஊடகங்கள், வர்த்தக நிறுவனங்கள், விளையாட்டு கழகங்கள், இளையோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் கூட்டு சேவையினாலே தான் இவ்வாறான பெருமுயற்சிகள் சாத்தியமாகின்றது. எனவே 26வது தமிழர் விளையாட்டு விழாவில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மக்களிடத்தில் இதனைக் கொண்டு செல்ல பரப்புரைத்தளத்தில் பங்காற்றிய கலைஞர்கள், ஊடகங்கள், சமூகவலைத் தளங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
7 000ற்கும் மேற்பட்டவர்கள் பங்கெடுத்த இந்நிகழ்வு இரவு 10.00 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.
விழா முடிந்த மறு இரு தினங்களும், மைதான துப்பரவுப் பணியில் ஈடுபட்டிருந்த எமது கழக தொண்டர்களுக்கும் Express Events ஊழியர்களை ஒழுங்கு செய்து தந்த அந்நிறுவனத்தின் உரிமையாளர் திரு. ஜெயச்சந்திரன் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்தனர்.