கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி மறைந்தார்..! திரையுலகினர் இரங்கல்!!
எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பிரபல நடிகர்களுடன் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், ’நடசார்வபொவ்மா’ என்ற கன்னட படத்தில் 2019இல் கடைசியாக நடித்தார்.

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) உடல் நலக்குறைவு காரணமாக இன்று பெங்களூரில் காலமானார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஜனவரி 7, 1938இல் பிறந்த சரோஜா தேவி, தனது 17 வயதில் கன்னட படத்தில் நடிகையாக அறிமுகமானார். ராதா தேவி என இயற்பெயர் கொண்ட அவர், கன்னட திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தமிழில் ’திருமணம்’ என்ற படத்தில் 1956ஆம் ஆண்டு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் 1958ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடித்த ’நாடோடி மன்னன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் எம்.ஜி.ஆர். திரை வாழ்விலும் முக்கிய படமாக அமைந்தது. இந்தப் படம் மூலமாக தமிழகத்தின் பட்டித்தொட்டி எல்லாம் பிரபலமானார் சரோஜா தேவி.
காலங்கள் பல கடந்தும் ’நாடோடி மன்னன்’ திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய படமாக இன்றளவும் உள்ளது. தொடர்ந்து அதே வருடம் ’ஸ்கூல் மாஸ்டர்’ படத்தில் சிவாஜியுடன் இணைந்து நடித்தார். தமிழில் ஆரம்ப காலகட்டத்தில் நடிகை சரோஜா தேவிக்கு ’கல்யாண பரிசு’ திரைப்படம் பெரும் புகழை வாங்கிக் கொடுத்தது. பின்னர், இருவர் உள்ளம், ஆலயமணி, அருணோதயம், அன்பே வா, என் கடமை என பல்வேறு தமிழ் படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அனைத்து விதமான உணர்வுகளை கடத்தும் காந்தக் கண்கள், நவரசங்களை கடத்தும் முகம் என ரசிகர்கள் மத்தியில் கனவுக் கன்னியாக வலம் வந்தார்.
1960, 70களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என இந்திய சினிமாவை கலக்கி வந்த சரோஜா தேவி நடிகர்களை விட அதிக சம்பளம் வாங்கிய நடிகையாக திகழ்ந்தார். தமிழ் சினிமா ரசிகர்களால் ’கன்னடத்து பைங்கிளி’ என அன்போடு அழைக்கப்பட்டார். தமிழ், கன்னட மொழியில் 'பெண் சூப்பர் ஸ்டார்' என அழைக்கும் அளவுக்கு மார்க்கெட்டின் உச்சியில் இருந்த சரோஜா தேவி, ஒரு நாளைக்கு 18 மணி நேரம் திரைப்படங்களில் நடித்ததாகவும் செய்திகள் வெளியானது.
நடிகை சரோஜா தேவி எம்.ஜி.ஆருடன் 26 படங்களும், சிவாஜி கணேசனுடன் 22 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். பின்னர், அடுத்த தலைமுறை நடிகர்கள் வந்த பிறகும், தமிழ் சினிமாவால் சரோஜா தேவியை மறக்க முடியவில்லை. இதனால் மீண்டும் அவரை தமிழ் திரையுலகம் அணுகியது. இதையடுத்து, கமல்ஹாசனுடன் ’பார்த்தால் பசி தீரும்’, விஜய்யுடன் ’ஒன்ஸ் மோர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் சரோஜா தேவி. கடைசியாக, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த ’ஆதவன்’ படத்திலும் நடித்தார். இதுவே சரோஜா தேவி நடித்த கடைசி தமிழ் படமாகும்.
சினிமாவில் கொடி கட்டி பறந்த சரோஜா தேவிக்கு கடந்த 1962ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதும், 1992ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும், கடந்த 2008ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கி கௌரவித்தது.
பெங்களூருவில் வசித்து வந்த சரோஜா தேவி, கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.