"இது எனது மகனா? என் தங்கையா? என் நண்பனா?" என்ற பதைபதைப்புடன், உறவுகள் அந்த எலும்புக் கூடுகளை வெறித்துப் பார்த்தனர்.
சரியான காரணப் பெயர் தான் செம்மணி "தமிழர் இரத்தால் சிவந்து போன மண்".

செம்மணி என்ற அந்த நிலப்பரப்பு, யாழ்ப்பாணத்தின் இதயத்தில் அமைந்துள்ள , வெறும் மணலும் கற்களும் நிறைந்த ஒரு இடம் மட்டுமல்ல. அது ஒரு தேசத்தின் இதயத்தில் பதிந்திருக்கும் ஆறாத காயம். அந்த மண்ணின் ஒவ்வொரு துகளிலும், ஒவ்வொரு அங்குலத்திலும் அநியாயமாக அழிக்கப்பட்ட உயிர்களின் இரத்த அணுக்களும் , அவர்கள் கண்ணீரின் உப்புகளும், அடக்கப்பட்ட கதைகளின் சுவடுகளும் புதைந்து கிடக்கின்றன. போர் மேகங்கள் சூழ்ந்திருந்த ஒரு காலத்தில், உயிர்கள் மௌனமாய் உறைந்த மண்ணது.
1996ஆம் ஆண்டு. யாழ்ப்பாணத்தின் வீதிகள் வழமையான ஆர்ப்பரிப்பை இழந்திருந்தன. ஒருவித கனத்த மௌனம் எங்கும் பரவியிருந்தது. ஒவ்வொரு தாயின் பார்வையிலும், தந்தையின் குரலிலும் ஒரு அச்சம் ஒட்டிக்கொண்டிருந்தது. "எங்கே போனான் என் மகன்? எப்போது திரும்புவாள் என் மகள்?" - இந்த கேள்விகள் காற்றோடு கலந்து, விடை தெரியாத சோக கீதமாய் ஒலித்தன. இந்த கேள்விகளுக்கு விடைதேடி அலைந்த கண்களின் ஏக்கத்தை, காலம் கூட துடைத்தெறியவில்லை.
அந்த மௌனத்தை ஒரு பேரலையாய் உடைத்தெறிந்தது கிருஷ்ணாந்தி குமாரசாமி என்ற சிறுமியின் சோகமான கதை. பள்ளிக்கூடத்திற்குச் சென்றவள், வீடு திரும்பவேயில்லை. அவளின் சிரிப்பும், கலகலப்பும் நிறைந்த கண்கள் நிரந்தரமாக மூடிக்கொண்டன. ஒரு பூப்போன்ற வாழ்வு, அரக்கத்தனமான கைகளால் பறிக்கப்பட்டு, செம்மணி மண்ணில் புதைக்கப்பட்டது. அந்த மரணம், தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் துயரத்தைக் கடந்து, ஒட்டுமொத்த தேசத்தின் ஆன்மாவையும் உலுக்கியது.
அந்தச் சிறுமியின் வழக்கில் கிடைத்த துப்பு, ஒரு இருண்ட ரகசியத்தின் திரையை மெல்ல விலக்கியது. "செம்மணியில் இன்னும் பலர் புதைந்திருக்கிறார்கள்," என்ற ஒற்றை வார்த்தை, உறைந்து போயிருந்த இதயங்களை உசுப்பியது. அதுவரை அமுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணீர்க் கதவுகள் திறந்தன.
பின்னர், நீதி தேடும் வேட்கையில், செம்மணி மண்ணைத் தோண்டும் பணி தொடங்கியது. ஒவ்வொரு மண்வெட்டி அடியிலும், ஆயிரமாயிரம் கதைகள் புதைந்திருந்தன. ஒவ்வொரு தோண்டலிலும், எலும்புக்கூடுகளின் வடிவங்கள் தென்பட்டபோது, அங்கிருந்தவர்களின் இதயத்துடிப்பு ஒரு கணம் நின்று போயிருக்கும். "இது எனது மகனா? என் தங்கையா? என் நண்பனா?" என்ற பதைபதைப்புடன், உறவுகள் அந்த எலும்புக் கூடுகளை வெறித்துப் பார்த்தனர். காற்றின் ஒவ்வொரு அசைவிலும், காணாமல் போனவர்களின் ஆன்மாக்கள் கதறி அழுவது போன்ற ஒரு உணர்வு. அந்த அகழ்வாராய்ச்சிகள், வெறும் உடல்களை மட்டுமல்ல, நீதி மறுக்கப்பட்ட ஆன்மாக்களின் ஓலங்களையும் வெளிக்கொணர்ந்தன.
சிதைந்து போன உடல்களை அடையாளம் காண்பது என்பது, இதயத்தை உலுக்கும் ஒரு செயல். ஒரு காலத்தில் உயிர் துடிப்புடன் இருந்த உடல், இன்று அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து, மௌனமாய் புதைந்து கிடக்கிறது. ஒரு தாயின் கருவறையில் உருவான உயிர், இப்படி ஒரு குழியில் அநாதையாக கிடப்பது, மனித குலத்திற்கே ஏற்பட்ட அவமானம்.
செம்மணி, வெறும் புதைகுழி மட்டுமல்ல. அது நீதிக்கான போராட்டத்தின் ஒரு சின்னம். அங்கே புதைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரும், "எங்களுக்கு நீதி வேண்டும்! இந்த அநியாயங்கள் மீண்டும் நிகழக்கூடாது!" என்று மௌனமாக கதறுவது போல உணர்வு. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கண்கள் இன்றும் நீதியைத் தேடி அலைகின்றன. அவர்களின் குரல்கள் மெலிதாக இருந்தாலும், அவை ஒரு தேசத்தின் நியாயமான கோரிக்கையை எதிரொலிக்கின்றன.
காலம் பல காயங்களை ஆற்றலாம். ஆனால், செம்மணியின் காயம், ஒரு தேசத்தின் மனசாட்சியில் ஆழமாகப் பதிந்திருக்கும். அந்த மண்ணில் உறைந்திருக்கும் துயரக் கதைகள், ஒருபோதும் மறக்கப்படக்கூடாது. இந்த நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருக்க, நாம் கடந்த காலத்தின் தவறுகளிலிருந்து பாடம் கற்க வேண்டும். நீதிக்கான இந்தப் பயணம் நீளமானது என்றாலும், செம்மணியின் ஆன்மாக்கள் ஒரு நாள் நிம்மதி பெரும் என்ற நம்பிக்கையுடன், அந்த மண்ணை நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த மனிதாபிமான போராட்டத்தை, நீதிக்கான இந்த தேடலை, தயவு செய்து யாரும் தங்கள் அரசியல் சித்து விளையாட்டுகளுக்கும் சுய விளம்பரங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம். பாதிக்கப்பட்டவர்களின் வலி, அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தப்படக்கூடாது. அவர்களின் நீதி பெறும் நம்பிக்கையைச் சிதைக்கும் எந்தச் செயலும் மன்னிக்க முடியாதது. இந்தச் சோகம், ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் ஒரு பாடம். அதை மதித்து, அதன் புனிதத்தைக் காப்பது நம் அனைவரின் கடமை.