செம்மணி மனித புதைகுழி: போலியான படங்கள் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்!
”செம்மணி புதைகுழிகளில் மீட்கப்படும் எலும்பு கூடுகளை Ai தொழிநுட்பம் ஊடாக மாற்றி அமைப்போருக்கும் , அதனை சமூக ஊடகங்களில் பகிர்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்”

“செம்மணி மனித புதைகுழி தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் போலியான புகைப்படங்கள் பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்”என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ”செம்மணி புதைகுழிகளில் மீட்கப்படும் எலும்பு கூடுகளை Ai தொழிநுட்பம் ஊடாக மாற்றி அமைப்போருக்கும் , அதனை சமூக ஊடகங்களில் பகிர்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா எச்சரித்துள்ளார்.
செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” செம்மணி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் ஐந்தாம் நாள் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இதுவரையான அகழ்வில் 33 மனித எலும்புத் தொகுதிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட எலும்பு தொகுதிகள் தொடர்பாக நிபுணர்கள் வேலை செய்ய வேண்டிய தேவைப்பாடு இருப்பதால் நேற்று பகல் பொழுதில் மட்டும் இரண்டு சிறுவர்களின் உடல்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு ஆய்வுக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மட்டத்தில் உள்ள எலும்புத் தொகுதிகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து குழப்பமான சூழலில் இருப்பதால் சரியான விதத்தில் ஆய்வொன்றைச் செய்து தெளிவான விதத்தில் சரியாக அகழ்ந்த எடுப்பதற்கு நேரம் எடுக்கும் என்பதால் நேற்று புதிதாக எதுவுமே அடையாளப்படுத்தப்படவில்லை.
சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் செம்மணி மனித புதைகுழி தொடர்பான செயற்கை படங்களை பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். எதிர்வரும் காலத்தில் தொடர்ந்து இவ்வாறான படங்கள் பகிரப்படுமாக இருந்தால் குற்றவியல் விசாரணைகளை இடையூறு செய்தார் என்ற அடிப்படையிலும் நிலுவையில் உள்ள வழக்கில் நீதிமன்றை அவமதித்தார் என்ற அடிப்படையிலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.