பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் எதிர்கால செயற்றிட்டங்கள் குறித்து கலந்துரையாடியது.
,

பாராளுமன்ற மேம்பாட்டு செயற்றிட்டம் 2024/2027 இன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டடத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசூசா கொபோடா பெண் பாராளுமன்ற ஒன்றியத்துடன் கலந்துரையாடினார்.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்கால செயற்றிட்டங்கள் குறித்துக் கலந்துரையாடும் கூட்டமொன்று ஒன்றியத்தின் தலைவர் கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா போல்ராஜ் அவர்களின் தலைமையில் 20.06.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்குப் பெண்களைத் தெரிவுசெய்வது மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் கட்சிகளின் செயலாளர்களைச் சந்திப்பது, பத்தாவது பாராளுமன்றத்தில் சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தை மீண்டும் உருவாக்குவது, பாராளுமன்றத்திற்குள் பகல்நேர பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், பாராளுமன்ற மேம்பாட்டு செயற்றிட்டம் 2024/2027 இன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசூசா கொபோடா, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்துடன் கலந்துரையாடினார்.
இத்திட்டத்தின் அடிப்படையில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தினால் முன்னெடுக்க எதிர்பார்க்கப்படும் விடயங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே, சமன்மலீ குணசிங்ஹ, ஒன்றியத்தின் உறுப்பினர்களான கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) கெளஷல்யா ஆரியரத்ன, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி, சட்டத்தரணி நிலூஷா லக்மாலி கமகே, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, சட்டத்தரணி அனுஸ்கா திலகரத்ன, அம்பிகா சாமிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.