கட்சிகளை உடைப்பதே பாஜகவின் வேலை; நேற்று அதிமுக... இன்று பாமக: செல்வப்பெருந்தகை காட்டம்!
பாஜகவுடன் யார் கூட்டணி வைத்தாலும் அக்கட்சியை பாஜகவினர் அழிக்க விடுவார்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டியுள்ளார்.

அதிமுகவை பாஜக 4 பிரிவாக உடைத்ததை போல் தற்போது பாமகவை இரண்டாக உடைக்க பாஜக முயன்று வருவதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில், 2026 சட்டப்பேரவை தேர்தல் ஆயத்தப்பணி கூட்டம் மற்றும் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கிராம கமிட்டி உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று (ஜூலை 5) நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து செல்வப்பெருந்தகை கூறியதாவது, “ 2026 தேர்தலில் மதவாத சக்திகளுக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்கக்கூடாது. 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் அளவிற்கு ஒரு திட்டத்தை வைத்துள்ளோம். இதற்காக தமிழகம் முழுவதும் கூட்டங்கள் நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணி குறித்து கட்சியின் அகில இந்திய தலைமை முடிவு செய்யும்.
விஐய் பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என கூறியுள்ளார். அவர் மதவாத சக்திகளுக்கு இறையாகமல் இருந்தால் மகிழ்ச்சி. பாஜக எப்போதும் பிரித்தாளும் கட்சி. தமிழ்நாட்டில் முந்தைய தேர்தலில் அதிமுகவை 4 பிரிவுகளாக மாற்றியது. தற்போது பாமகவை இரண்டாக பிரிக்க முயற்சிக்கிறது. எனவே, பாஜகவுடன் யார் கூட்டணி வைத்தாலும், அந்த கட்சியை அந்த கட்சியை பிளவுபடுத்தி அழித்து விடுகிறது.
எடப்பாடி பழனிசாமி கடந்த 4 தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்துள்ளார். வரும் தேர்தலிலும் அதே நிலை தொடரும். முதலமைச்சர் யார் என்பதை, தேர்தலுக்கு பிறகு பாராளுமன்ற கூட்டு நடவடிக்கை குழு டெல்லியில் முடிவு செய்யும் என்று எச்.ராஜா கூறியுள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி முன்னுக்கு பின் முரணான கூட்டணி; இந்த கூட்டணி அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்களால் புறக்கணிக்கப்படும்.
திமுக கூட்டணி மிகவும் வலுவான கூட்டணி. இந்தியா கூட்டணி எஃகு கோட்டை போல் பலமாக உள்ளது. அதனை யாராலும் சேதப்படுத்த முடியாது. மதவாத சக்திகள் வலு பெற்று விடக்கூடாது என்பதே எங்கள் கூட்டணியின் நோக்கம்” என்றார்.
தொடர்ந்து, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில், குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாதது வருத்தமளிக்கிறது. இருப்பினும், காவல் துறையின் மீது நம்பிக்கை உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.