10 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போன மாம்பழம்
,

நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தான மாம்பழத் திருவிழாவில் ஒரு மாம்பழம் 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழா ஓகஸ்ட் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதன் ஏழாம் நாள் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்று (14) நடைபெற்றது.
இதன்போது, முருகனுக்கும் விநாயகப் பெருமானுக்கும் இடையே நடைபெற்ற உலகைச் சுற்றி முதலில் வலம் வருபவருக்கு மாம்பழம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முருகப் பெருமான் மயில் வாகனத்தில் உலகைச் சுற்றச் செல்ல, விநாயகப் பெருமான் சிவனையும் உமாதேவியையும் வலம் வந்து மாம்பழத்தைப் பெற்றுக்கொண்டார் என்ற புராணக் கதையை பிரதிபலிக்கும் நாடகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மாம்பழம் ஏலம் விடப்பட்ட நிலையில், ஏலம் 10,000 ரூபாயிலிருந்து தொடங்கி, சில நொடிகளில் 6 இலட்சம் ரூபாயாக உயர்ந்து, பின்னர் படிப்படியாக 10 இலட்சம் ரூபாய்க்கு இறுதியாக ஏலம் எடுக்கப்பட்டது.