மட்டுநகரில் ஓவியர் சு.நிர்மலவாசனின் ‘கெத்சமனி’ காண்பியக் கலைக் காட்சி!
.

இலங்கைத் தமிழ்ச் சூழலில் காத்திரமான ஓவிய தாபனக் கலையாக்கங்களில் ஈடுபட்டு வரும் ஓர் ஓவியச் செயற்பாட்டாளராக சு.நிர்மலவாசன் விளங்கி வருகிறார்.
தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் தனது ஓவிய தாபனக் கலைப் படைப்புகளினூடாக நன்கு அறியப்பட்டுள்ள இவர் இதுவரை 14 தனிநபர் காண்பியக் கலைக் காட்சிகளையும், 30 கூட்டுக் காண்பியக் கலைக் காட்சிகளையும் தேசிய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடத்தியுள்ளார்.
இவருடைய 15 ஆவது தனிநபர் ஓவிய தாபனக் காண்பியக் கலைக் காட்சி எதிர்வரும் 30 ஆந் திகதி தொடக்கம் செப்டெம்பர் 01 ஆந் தேதி வரைக்கும் மூன்று நாள்களுக்கு காலை 09:30 மணி தொடக்கம் மாலை 06:00 மணி வரை மட்டுநகர் புனித மிக்கேல் கல்லூரியிலுள்ள சிற்றாலய மண்டபத்தில் ‘கெத்சமனி’எனுந் தலைப்பில் நடைபெறவுள்ளது.
இக்காண்பியக் கலைக் காட்சியானது மட்/புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் தாய்ச் சங்கத்தினதும், மூன்றாவதுகண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழுவினரதும் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கைத் தீவில் கடந்த மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற உள்நாட்டுப் போர் எத்தகைய கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதனை மட்டக்களப்பின் கத்தோலிக்கப் பண்பாட்டுப் பின்புலத்தில் ஓர் குறுக்கு வெட்டுத் தோற்றத்துடன் முன்வைப்பதாக இக்காண்பியக் கலைக்காட்சி ஓவியர் சு.நிர்மலவாசனால் ஆக்கஞ் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ‘கருவாடுகள்’ என்ற தனது தொடர் ஓவிய தாபனக் கலையாக்கங்களினூடாகப் போர்க்காலத்தில் காணாமல் போன மனிதர்களின் நினைவுகளையும் அதன் அவலங்களையும் வெளிப்படுத்தியுள்ளதன் மற்றுமொரு பரிமாணமாக இந்தக் ‘கெத்சமனி’ எனும் ஓவிய தாபனக் கலைக் காட்சி இடம்பெறவுள்ளது.
பிரதிமை ஓவியங்கள் எனும் நுட்பத்தை மையமாகக் கொண்டு போர்க் காலத்தில் ஒடுக்கப்பட்ட மனிதர்களின் குரலாக ஒலித்த கத்தோலிக்கக் குருவானவர்களின் கதைகளையும், 2000 ஆம் ஆண்டில் வெசாக் தினத்தன்று மட்டுநகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தின் போது கொல்லப்பட்ட மறைக்கல்வி வகுப்புச் சிறார்களின் கதைகளையும் மீளவும் நினைவிற்குக் கொண்டு வந்து போரினால் பாதிக்கப்பட்டு வாழும் மனிதர்களை ஆற்றுப்படுத்திப் போருக்கு எதிரான குரலை ஒரு கலைஞனுக்கேயுரிய தார்மீக அறத்துடன் ஓங்கி ஒலிக்கும் வகையில் இக்காட்சி திட்டமிடப்பட்டுள்ளது.