ரஷ்ய போரில் பங்கேற்க நிர்பந்திக்கப்படும் கடலூர் மாணவர்! ஜெய்சங்கருக்கு திருமாவளவன் கோரிக்கை!
மருத்துவ மாணவரை விரைந்து இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவில் மருத்துவம் படித்து வரும் தமிழகத்தை சேர்ந்த மாணவரை, போரில் ஈடுபட கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்த நிலையில், அவரை உடனடியாக மீட்குமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, விசிக தலைவர் திருமாவளவன் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர். இவர் ரஷ்யாவில் மருத்தும் படித்து வருகிறார். இதனிடையே, அவரை உக்ரைன் போரில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என ரஷ்யா நிர்பந்திப்பதாகவும், அவரை மீட்டுத் தரக் கோரியும் கிஷோரின் பெற்றோர் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து மாணவனின் தந்தை சரவணன் கூறுகையில், "எனது மகன் கடந்த 2021 முதல் ரஷ்யாவில் மருத்துவம் படித்து வருகிறார். அவர் தமிழகத்தை சேர்ந்த நிதீஷ் மற்றும் ரஷ்ய மாணவர்கள் மூவருடன் ஒரே அறையில் தங்கியுள்ளார். இதில், ரஷ்ய மாணவர்கள் பகுதி நேரமாக கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் டெலிவரி செய்த கூரியரில் போதைப் பொருட்கள் இருந்தாக கூறி, அவர்களுடன் எனது மகன் கிஷோர் மற்றும் நிதீஷை போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.
இதில் ரஷ்ய மாணவர்கள் உட்பட மற்றவர்களை, போலீசார் விடுவித்த நிலையில், எனது மகனை விடுவிக்கவில்லை. மேலும், உக்ரைன் போருக்கு, ரஷ்யா சார்பாக செல்ல வேண்டும் என அவரிடம் போலீசார் நிர்பந்தித்து வருகிறார்கள். இது அனைத்தையும் எனது மகன் வாய்ஸ் ரெக்கார்டர் மூலம் வாட்ஸ் ஆப்பில் எங்களுக்கு அனுப்பியுள்ளார். எனது மகனை உடனடியாக மீட்டு இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இது தொடர்பாக மருத்து மாணவரின் சகோதரர் பிரசன்னா வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார். அதில், "ரஷ்யாவில் எம்பிபிஎஸ் படிக்கும் எனது சகோதரர் கடந்த மே 4, 2023-ல் போதைப் பொருள் தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனால் தனது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதன் காரணமாக, தனது தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனது சகோதரரை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்தக் கடித்தில் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், மருத்துவ மாணவர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து, அவரை இந்தியா கொண்டு வர வேண்டும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மருத்துவ மாணவரின் சகோதரர் பிரசன்னா, வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தை இணைத்து, நடவடிக்கை கோரி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் எக்ஸ் பக்கத்தில் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.