செம்மணி நாட்டின் மூன்றாவது பெரிய மனித புதைகுழி !
இதுவரையில் 85 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

யாழ். செம்மணி புதைகுழி அகழ்வு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் இதுவரையில் 85 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் சிறுவர்களின் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் மூன்றாவது பெரிய மனித புதைகுழியாக யாழ். செம்மணி புதைகுழி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
2023 இல் மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழி மூன்றாவது பெரிய மனித புதைகுழியாக அடையாளம் காணப்பட்டது. இங்கு 82 மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
யாழ். செம்மணியில் தற்போது இரண்டாம் கட்ட அகழ்வாய்வு பணிகள் இடம்பெற்று வரும் வேளையில் 18ஆவது நாளான நேற்றைய தினம் (23) வரையில் புதைகுழி வளாகத்தில் இருந்து ஐந்து புதிய மனித மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் ஊடங்களுக்குத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
நீதிமன்றத்தால் குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் 85 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, நேற்றைய தினம் வரையில் 67 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள சதொச புதைகுழி ஆகும். அங்கு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
2013 ஆம் ஆண்டில், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது பெரிய புதைகுழியாகக் கருதப்படும் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள ஒரு இடத்திலிருந்து 155 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.
இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழியாக மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழி தற்போது மாறியுள்ளது. அங்கு 82 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
கொக்குத்தொடுவாய் புதைகுழியிலிருந்து 52 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பின்னர் அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவடைந்தன. ஒரு வருடத்திற்கு முன்னர், கொழும்பு துறைமுகத்திற்கு செல்லும் புதிய அதிவேக வீதியின் நிர்மாணத்திற்காக நிலம் தோண்டப்பட்டபோது, ஜூலை 13, 2024 அன்று முதல் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கொழும்பு துறைமுகத்தில் உள்ள பழைய செயலக வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட மொத்த மனித எலும்புகளின் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்தப் மனித புதைகுழிகள் அனைத்தும் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த 17ஆம் திகதி, கொழும்பில் பொலிஸ் தடைகளுக்கு மத்தியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, தொழிற்சங்கத் தலைவர்களும் வெகுஜன அமைப்புகளும் நாடு முழுவதும் சிதறிக்கிடக்கும் இருபதுக்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள் குறித்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.