பேரூந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலை குறைப்பதற்கான நடவடிக்கைகள்!
பரந்தன் பகுதியின் பேரூந்து நிலையம் மற்றும் அப்பகுதியில் ஏற்படும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல்!

பரந்தன் பகுதியின் பேரூந்து நிலையம் மற்றும் அப்பகுதியில் ஏற்படும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (12) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
பரந்தன் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் முன்வைத்த கோரிக்கைக்கமைய குறித்த கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
இதன்போது குறித்த பேரூந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலை குறைப்பதற்கான நடவடிக்கைகள், வழித்தடங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல் முதலான பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.
கலந்துரையாடலின் இறுதியில் குறித்த பகுதிக்கு களவிஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு சாத்தியப்பாடான விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கண்டாவளை பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், கிளிநொச்சி மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர், கரைச்சி பிரதேச சபையில் உப தவிசாளர், கரைச்சி பிரதேச சபைச் செயலாளர், கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கண்டாவளை பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், வர்த்தக, தனியார் பேருந்து மற்றும் முச்சக்கர வண்டிகள் சங்கத்தினர், இலங்கை போக்குவரத்து சபையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.